Skip to main content

ரயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த நண்பர்கள் நால்வருக்கு ஆயுள் தண்டனை

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

nn

 

ஒடிசா மாநிலம் கந்தர்கல் மாவட்டம், ரூர்கேலா நகரத்தை சேர்ந்த ஆகாஷ் தாஸ் (வயது 28), ஜித்தன் கிரி (வயது 26), அனில் குமார் ஓஜா (வயது 23), சுக்தேவ்கடையா (வயது 50), சோட்டுபடாயக் (வயது 28) ஆகிய ஐந்து வடமாநில இளைஞர்கள் சென்ட்ரிங் வேலை செய்வதற்காக சுவேதா விரைவு ரயில் மூலமாக ஒடிசாவில் இருந்து மதுரை நோக்கி கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வந்து கொண்டிருந்தனர்.

 

அப்போது தமிழகத்திற்குள் ரயில் வந்து கொண்டிருந்தபோது ஆகாஷ் தாஸ் என்பவர் தனக்கு வேலை வேண்டாம் எனவும், வீட்டிற்கு நான் திரும்பி செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். அப்போது அவருடன் இருந்த சக நண்பர்கள் ஆகாஷ் தாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், கொடுத்த அட்வான்ஸ் தொகை 3000 ரூபாயை திருப்பிக் கொடுக்கச் சொல்லியும் சண்டையிட்டுள்ளனர்.

 

அப்போது விருத்தாசலம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள கேட் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது 4 நண்பர்களும் சேர்ந்து, தங்களது சக நண்பரான ஆகாஷ் தாஸை ஓடும் ரயிலின் பின்பக்க கதவை திறந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் தாஸ் உயிரிழந்தார்.

 

nn

 

இச்சம்பவம் குறித்து விருத்தாச்சலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருதாச்சலம் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணையானது விருதாச்சலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 3 இல் நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் 22 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜித்தன் கிரி, அனில் குமார் ஓஜா, சுக்தேவ் கடயா, சோட்டுபடாயக் ஆகிய 4 பேர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்டத் தவறினால், கூடுதலாக மூன்று மாத சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார்.

 

பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேரையும் காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். வேலைக்காக வந்த தனது நண்பனை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் நான்கு வட மாநிலத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொடூரக் கொலை; விரலை வைத்து குற்றவாளியைத் தூக்கிய போலீஸ் - அதிரவைக்கும் வாக்குமூலம்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Accused in Cuddalore family case arrested in Chennai
சங்கர் ஆனந்த் -  சாகுல் அமீது

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தகுமார்(43) இவர் தனது தாய் கமலேஸ்வரி(60) மற்றும் 10 வயது மகனுடன் காராமணிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். சுகந்தகுமாருக்கு இரு திருமணமாகி இரண்டு மனைவிகளையும் பிரிந்து தாய் மற்றும் 2வது மனைவிக்குப் பிறந்த 10 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுகந்தகுமார், கமலேஸ்வரி, 10 வயது மகன் மூவரும் வெட்டிக்கொன்று எரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளனர். பின்பு வீட்டில் இருந்து துர்நாற்றமும், புகையும் வெளி வந்ததால் அருகே இருந்தவர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று மூவர் உடலையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுற்றியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சுகந்தகுமாரின் எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் ஆனந்த் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் நோட்டமிட்டதில் சங்கர் ஆனந்த் திடீரென தலைமறைவாகியுள்ளார். மேலும் சங்கர் ஆனந்தின் கையில் ஒரு விரலில் வெட்டுப்பட்டுக் கட்டுப்போட்டிருந்ததும் போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தையும் கொடுக்க, தலைமறைவாக இருந்த ஆனந்தை செல்போன் சிக்னல் மூலம் தேடினர். அதில் சென்னை மறைமலைநகர் பகுதியில் பதுங்கி இருந்த சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் அமீது இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர் ஆனந்த், எனது அம்மாவிற்கும் சுகந்தகுமாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ஊரில் பலரும் பேசினர். அதனால் மனமுடைந்த எனது தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்காக சுகந்தகுமாரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் பெங்களூரில் பாதி நாளும் வீட்டில் பாதி நாளும் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவரது மகனை அழைத்துக் கேட்டபோது அவன் என்னை மரியாதை இல்லாமல் திட்டினான். அதனால் அவனை நான் அடித்ததை அவனது பாட்டி கமலேஸ்வரியிடம் கூறி அவர், என்னைக் கடுமையாகத் திட்டினார். காரி துப்பி அசிங்கப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சுகந்த குமாரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ய  நானும் எனது கூட்டாளிகளும் சேர்ந்து 13 ஆம் தேதி இரவு சுகந்தகுமார் வீட்டின் கதவைத் தட்டினோம். அப்போது கதவைத் திறந்த சுகந்தகுமாரை வெட்டி கொலை செய்தேன் பதிலுக்கு அவர் என் கை விரலை  வெட்டிவிட்டார். பின்பு எங்களைத் தாக்க வந்த கமலேஸ்வரியையும் கொலைசெய்தேன். 10 வயது சிறுவனை வெளியேவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்று கூறி அவனையும் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

பின்பு மறுநாள் பக்கத்து வீட்டு வழியாகத் தப்பித்துச் சென்றோம். ஆனால் துர்நாற்றம் வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று 14 ஆம் தேதி   நண்பர் சாகுல் அமீதிடம் பெட்ரோல் வாங்கி வரச்சொல்லி மீண்டும் வந்து மூன்று பேரின் உடலிலும் ஊற்றி எரித்துவிட்டேன். பின்னர் வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுவிட்டோம். இதனிடையே சுகந்தகுமார் வெட்டியதில் எனது கட்டை விரல் பாதி துண்டாகித் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை வெட்டி புதரில் வீசிவிட்டு சென்னைக்கு வந்து தலைமறைவாகிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து கொலைவழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பாஜக நிர்வாகி அஞ்சலை கைது

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nn

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

nn

தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.