ADVERTISEMENT

ரயில் தீ விபத்து; 5 பேருக்கு நீதிமன்ற காவல்

04:38 PM Aug 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ-ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். கடந்த 26 ஆம் தேதி நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை வந்தடைந்த இந்த ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். அதன்படி நேற்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டபோது ரயிலில் இருந்து தப்பிச் சென்ற தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், உத்திர பிரதேசத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா ஊழியர்கள் 5 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்ய பிரகாஷ், நரேந்திர கும்ஸ், கர்தீஸ் ஜஹானி, தீபக், சுபம் காஷியப் ஆகிய ஐந்து பேர் மீது 3 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT