Skip to main content

மதுரை ரயில் தீ விபத்து; 5 பேரிடம் போலீசார் விசாரணை

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Madurai train fire incident Police investigation 5 people

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மதுரை வந்தடைந்த இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். அதன் படி நேற்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட போது ரயிலில் இருந்து தப்பிச் சென்ற தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் சட்ட விரோதமாக சிலிண்டர் எடுத்து சென்றதே தீ விபத்திற்கு காரணம் என ரயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்