ADVERTISEMENT

ட்ராஃபிக் சிக்னலால் ஏற்பட்ட நெரிசல்! - எரிச்சலில் வாகன ஓட்டிகள்!

06:16 PM Feb 19, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாநகரில், அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இந்த ரவுண்டானாவில் ப்ரப் ரோட்டில் இருந்துவரும் வாகனங்கள், கே.வி.என் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஈரோடு பஸ் நிலையத்திலிருந்தும், சவிதா வழியாகவும், பெருந்துறை ரோடு வழியாக கோவை திருப்பூர் பெருந்துறை செல்லும் வாகனங்கள், நசியனூர் செல்லும் வாகனங்கள் என ஐந்து பாதையிலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் செல்வதால், இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகவே காணப்படும். இதனால், இந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும். மேலும், இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று வந்தது. இதனால் சில நேரங்களில் விபத்தும் நடந்துள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் டிராஃபிக் சிக்னல் செயல்படத் தொடங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது முன்பை விட கூடுதலாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. அதாவது கே.வி.என் ரோடு, பெருந்துறை ரோடு, ப்ரப் ரோடு போன்ற பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வாகன ஓட்டிகளிடம் இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த டிராஃபிக் சிக்னலை செயல்படாமல் வைத்திருந்தனர் போக்குவரத்து போலீசார்.

இந்த நிலையில், 19 ந் தேதி முதல் மீண்டும் ஈரோடு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் டிராஃபிக் சிக்னலை செயல்பட வைத்தார்கள் போலீசார். இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கே.வி.என் ரோட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இங்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருவதிலும் அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ப்ரப் ரோடு, பெருந்துறை ரோடு பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால், பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் அங்கு போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதனால், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்தப் பகுதியில் சிக்னல் வேண்டாம். சிக்னல் இல்லாமல் இருந்தால்தான் எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்றுவர முடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். வேறு வழியில்லாமல் 19 ந் தேதி மதியத்திற்குப் பிறகு போலீஸாரே டிராஃபிக் சிக்னலை அகற்றிவிட்டு மீண்டும் பழையமுறையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதன் பிறகு தான் அந்தப் பகுதியில் போக்குவரத்துச் சீரானது. சில இடங்களில் ட்ராஃபிக் சிக்னல் போக்குவரத்தைச் சீராக்கும், சில இடங்களில் ட்ராஃபிக் சிக்னல் வைத்தால் போக்குவரத்தை நெரிசலாக்கும் அப்படித்தான் இங்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT