ADVERTISEMENT

துபாயிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் - சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!  

03:27 PM Feb 21, 2024 | ArunPrakash

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக எந்தப் பக்கம் சென்றாலும் பிரச்சனையில் சிக்கித் தவிப்பது வழக்கமாக நடக்கின்ற கொடுமையாகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிப்பதற்காக துபாய் சென்ற மீனவர்கள், சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் தவித்த நிலையில், தூதரகம் வாயிலாகத் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 பேர் துபாய் சென்று, அங்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணியினைச் செய்துவந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்குமுன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குச் செல்லவேண்டும் என்று அவர் விடுமுறை கேட்டார். ஒப்பந்தகாரர் இதற்குச் சம்மதிக்காத நிலையில், மீனவர்களுக்கும் ஒப்பந்தகாரருக்குமிடையே வாய்த்தகராறு மூண்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, முறையான சம்பளமோ, உணவோ வழங்கப்படாத நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியை அனைத்து மீனவர்களும் மேற்கொண்டனர். முன்பு நடந்த வாக்குவாதம் வழக்காக துபாயில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊருக்கு மீனவர்கள் திரும்பவேண்டுமென்றால், பணத்தைச் செலுத்தினால்தான் அது முடியும் எனக் கறாராக ஒப்பந்தகாரர் தெரிவித்துவிட்டார்.

அதனால் அம்மீனவர்கள் நீதிமன்றத்தையும், இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு, தமிழக அதிகாரிகளின் உதவியுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT