ADVERTISEMENT

“மூன்றாண்டுகளாக போராடியும் மதிக்காத மத்திய அரசு” -  தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

11:46 AM Feb 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்குப் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் விரும்பும் கட்சிகளின் சார்பில் பல கட்டமாக போராட்டமும், எதிர்ப்பும் இருந்து வந்தது. அதனைக் கண்டுக்கொள்ளாத மத்திய அரசு, 2 அணு உலைகளைக் கட்டுமானம் செய்து செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இதற்கு எதிர்ப்புகள் இருந்தும் அதனை ஒரு துளி அளவும் கவனிக்காமல், கருத்தில் கொள்ளாமல் மேலும் 2 உலைகளை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

இதனைக் கண்டித்தும், எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “ஒருபுறம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்து வரும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது. அணுமின் நிலையத்தின் அணு உலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு வெளியானது.

புகுஷிமா அணு உலை விபத்தினால் வெளியேறிய கதிர்வீச்சு 10 ஆண்டுகளைக் கடந்தும், காற்றிலும் கடலிலும் கலந்து உலகின் பல்வேறு மூலைகளுக்குப் பரவிக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக, கனடா நாட்டின் அலஸ்காவை ஒட்டிய பெரிங் ஜலசந்தி கடற்பகுதியில் புகுஷிமா அணு உலை விபத்தின் கதிர்வீச்சு கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணுவுலைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சிய மக்கள், கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் ஒன்று திரண்டு, அமைதிவழி போராட்டதை மூன்றாண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்தார்கள்.

ஆனால், அந்த சாமானிய மக்களின் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசு, போராடுபவர்களைப் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்தது. மேலும், போராடியவர்களை காவல்துறையின் மூலமாக தொடர்ந்து அச்சுறுத்தியது. மக்களின் போராட்டத்தையும் உணர்வுகளையும் மீறி, முதல் இரண்டு அணு உலைகளைத் தொடங்கியது அரசு. அதன் பிறகு 3,4 அலகுகளுக்கான பணிகளையும் துவக்கியது. இப்போது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மோடி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதல் இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவுகளை மேலாண்மை செய்யவே இதுவரை கட்டுமானங்களை உருவாக்கவில்லை. அல்லது உருவாக்க முடியவில்லை. அணுக்கழிவுகளை நிரந்தரமாக புதைக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் எங்கே அமைப்பது என்று முடிவு செய்யப்படவில்லை.

அணு உலையில் இருந்து தற்போது வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் கிடையாது. இச்சூழலில், கூடங்குளத்தில் மேலும் இரண்டு உலைகளுக்கான கட்டுமானங்களைத் துவங்குவது தமிழகத்திற்குப் பேராபத்தாக முடியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3,4,5,6 அலகுகளுக்கான பணிகளை நிறுத்தி விரிவாக்க திட்டத்தைக் கைவிட வேண்டும். முதல் இரண்டு உலைகள், 100க்கும் மேற்பட்ட முறைகள் பழுதடைந்துள்ளன. அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில்
வலியுறுத்துகிறேன்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT