ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் 14 இருசக்கர வாகனங்கள் திருட்டு: மூன்று பேர் கைது

03:22 PM Sep 27, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 இருசக்கர மோட்டார் வாகனங்கள் திருடி விற்பனை செய்த மூன்று பேரை சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போனது. இதனையடுத்து வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார். சிதம்பரம் டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜ் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் சிதம்பரம், புவனகிரி பகுதியில் சிசிடிவி கேமரா மூலம் இரு வாகனங்கள் திருடியவர்களை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விருத்தாசலம் தாலுக்கா பெரியாகுறிச்சி புதுநகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் கலைவாணன் (23) என்ற வாலிபர் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 14 இரு சக்கர மோட்டார் வாகனங்களை திருடியது தெரியவந்தது.

மேலும் இவர் வாகனங்களை திருடி புவனகிரி தாலுகா சின்னகுமட்டி கிணற்றங்கரை தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் என்.நிதீஷ்குமார் (25), சின்னகுமட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் சூர்யா (21) ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் மேற்கண்ட மூவரையும் வாகன தணிக்கையின் போது செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 14 மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT