Skip to main content

போதை பொருள் விவகாரம்!! உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்..

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
Three people, including Assistant Inspector, fired

 

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை கடற்கரை ஓரத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 8 பொட்டலங்கள் கிடந்தன. அதை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் அலட்சியமாக வைத்திருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி மாமல்லபுரம் அருகே ஒதுங்கிய இரும்பு தொட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருள் சிக்கியது. அதேபோன்ற போதை பொருள்தான் புதுப்பேட்டையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல்படை மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளில் 3 பொட்டலங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிதம்பரம் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் சமர்பித்தார்.

அதனடிப்படையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஆனந்தன், எஸ்.பி.யின் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார், முதுநிலை காவலர் பாக்கியராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த மூன்று பேரையும் விழுப்புரம் சரக டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் “போதை பாக்கெட் என்று தெரியாமல், காலாவதியான டீ தூள் தானே எனக்கருதி காவல்நிலையத்தில் குப்பைகளை போடும் இடத்தில் போட்டு வைத்து விட்டோம். அப்படி போட்டு வைக்கும் குப்பைகளை மாதம் ஒருமுறை சுத்தம் செய்யும்போது, காலியான டீ தூள் என நினைத்து குப்பையை கொளுத்திவிட்டவர்கள் அவர்களின் கண்ணில் பட்ட பொட்டலங்களை எரித்திருக்கலாம், மற்றபடி அதனை யாரும் எடுக்கவில்லை” என்பதே அங்கு பணிபுரியும் போலீசாரின் தகவலாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.