ADVERTISEMENT

பொதுத்தேர்வை தவிர்க்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்; அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை

11:41 AM Mar 16, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத் தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்தது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும் தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்விற்கு பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8,01,744 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 49 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதுபோல் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 901 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 7 ஆயிரத்து 786 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,115 பேர் தேர்வு எழுத வரவில்லை.’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த ஆங்கிலப் பாடத்தேர்விலும் 49 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 4% ஆக இருந்த நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு 6% ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மொழித்தேர்வுகளை மாணவர்கள் எழுதாதது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் இணையம் மூலம் இணைந்துள்ளார்கள். மாணவர்கள் தேர்வு எழுதாததன் காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமா? அல்லது மாற்று முயற்சிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT