ADVERTISEMENT

சிக்கியவை சிறு மீன்களே! தப்பியதோ திமிங்கலங்கள்! -பட்டியலிடப்படும் குரூப் தேர்வு தில்லுமுல்லு!

08:11 AM Jan 28, 2020 | kalaimohan

வெளிச்சத்துக்கு வந்த குரூப் 4 தேர்வு முறைகேடானது, குரூப் 1 தேர்வை பலமுறை எழுதி ‘இன்டர்வியூ’ வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய ஒருவரை ரொம்பவே வெதும்பச் செய்துள்ளது. பொதுவெளியில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் இதோ -

‘குரூப் 4 தேர்வு முறைகேடு அம்பலமாகிவிட்டது. தேர்வாணையமோ, சிபிசிஐடியோ, அல்லது இரண்டு அமைப்புகளும் சேர்ந்தோ, ‘ரெக்கார்ட் கிளார்க்’ என்ற மிகப்பெரிய(?) பதவியிலுள்ள ஒரு அலுவலரோடு இந்த முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திரைக்கதையைக் கச்சிதமாக வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அந்த ரெக்கார்ட் கிளார்க் ராமேஸ்வரத்திற்குப் பணிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தாரா? அல்லது அனுப்பப்பட்டாரா? சீல் வைக்கப்பட்ட விடைத்தாள்களை எடுத்து மீண்டும் மீண்டும் எழுதி வைத்ததைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரே வகைக் குற்றத்திற்கு ஒரே வகை தண்டனை என்பதால், மீண்டும் ஜெயகுமாரை சிக்க வைத்தனரா?

குரூப் 4, குரூப் 2- தேர்வுகளில் காட்டிய கவனத்தை, குரூப் 1 பக்கமும் திருப்பி விடக்கூடாதா? குரூப் 4 முறைகேட்டில் தொடர்புடையவர்கள் குரூப் 1-லும் தங்களின் கைவரிசையை நிச்சயம் காட்டியிருப்பார்கள். அது என்னவென்று பார்ப்போம்!

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதலில், குரூப் 4 முறைகேடானது வினாத்தாள் வழியே அரங்கேறி இருக்கிறது. தேர்வாணையமோ அதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. ஏனெனில், மற்ற தேர்வுகளின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்பதால், இதை ஏதோ கீழ்மட்ட அலுவலர்களின் முறைகேடாகச் சித்தரித்து, இந்தப் பிரச்சனையை அமுக்கிவிடுவார்கள். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது எனச் சொல்வார்கள். தற்போது, நிலைமை தலைகீழ். சின்ன மீனை மாட்டிவிட்டு பெரிய திமிங்கிலங்களைத் தப்பவைப்பது நடக்கிறது.

குரூப் 1-ல் இந்தத் தடவை சரிபாதி இடங்கள் விலைபேசப்பட்டு வியாபாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு, சென்னை தலைமை செயலகத்திலுள்ள முக்கிய புள்ளி உடந்தை. அந்தப் புள்ளிக்கு அரசியல் மட்டத்திலுள்ள தொடர்புகளின் வழியாக, ரூ.40 முதல் 50 இலட்சம் வரை குரூப்- 1 சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

குரூப்-1 தயாரிப்பில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே, கீழ்கண்ட விபரங்களை பகிர்கிறேன். இதனை மறுத்தோ, எதிர்வினை ஆற்றியோ சம்பந்தப்பட்ட நபர்கள் எதிர்வினை ஆற்றிக்கொள்ளக்கூடும்.


குரூப்-1 மாநில மதிப்பெண் பெற்றவர் பெயரின் முதலெழுத்து அ-வில் தொடங்கும். அவர், முதல் முறையிலேயே வென்ற சாதனையாளர். அவரது தந்தை அரசுத்துறையில் முக்கிய உயர் அதிகாரி. சிவகங்கையைச் சேர்ந்த இவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்.

மாநிலத்தில் 2-வது இடம் பெற்ற 22 வயது சாதனையாளரை தங்கள் மாணவி என்று யாரும் உரிமை கொண்டாடவில்லை. அவரது பேட்டியும் வெளியாகவில்லை. அந்தப் பெண்ணுக்கு இந்திய அரசியலமைப்பில் 20 ஷரத்துகள்கூட தெரியாதென்று, அந்த மாணவியின் ஊரைச் சேர்ந்த தேர்வர் ஒருவரே சொல்கிறார்.

சென்னைதான் முறைகேடுகளின் முகாந்திரமாக பல வருடங்களாக இருந்தது. கடந்த சில வருடங்களாக, மதுரையும் மாறிவிட்டது. சென்னைக்கு ஒரு 'ராஜே' என்றால் மதுரைக்கு ஒரு 'ராஜன்' அவ்வளவே!

சந்தேகம் வராமல் இருப்பதற்குத் தென்னகப் பயிற்சி மையங்கள் கையாளும் உத்தி அலாதியானவை. தேர்வில் வெற்றி பெற்றபின், அந்த மையங்கள் பக்கம் நம் சந்தேகப் பார்வை திரும்பாமல் தடுப்பதற்கு அனுதாபமான வாசகங்களைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. ‘கூலித் தொழிலாளியின் மகள்’, ‘படிப்பைப் பாதியில் விட்டவர்’ என்பது போன்ற வாசகங்களே அவை.

சிவகாசியைச் சேர்ந்த பெண் ஒருவர் டி.எஸ்.பி.யாகத் தேர்வு பெற்றுள்ளார். இவர், மதுரையில் 'முக்கிய' மையத்தில் பயின்றவர். 2018-ல் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 2019-ல் டி.எஸ்.பி. ஆனவர். இவரும் பரிசோதிக்கப் படவேண்டியவரே!

மதுரையைச் சேர்ந்த அந்த ‘மாறுபட்டவர்’, மதுரையின் அந்த 'முக்கிய' அகாடமியின் மாணவி. தன்னை, மதுரை கார்ப்பரேஷன் இலவச பயிற்சி மாணவியாக மட்டுமே காண்பித்துக்கொள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏன் வந்தது?

மாறுபட்டவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் அல்லது அவர்களது உண்மைச் சாதியின் படி இடஒதுக்கீடு பெறலாம் என்ற நிலை இருக்கும்போது, 20 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும். அவரோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை விட்டுவிட்டு, 3.5 சதவீதமுள்ள சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை தேர்வு செய்தார். சிறுபான்மை பிரிவு PSTM முதன்மைத் தேர்வு மாணவர்களின் டாப் மூன்று மதிப்பெண்கள் முறையே 429, 352, 350 ஆகும். இதில், அந்த ‘மாறுபட்ட’ மாணவியின் மதிப்பெண் 429 ஆகும். ஏறக்குறைய 80 மதிப்பெண் வித்தியாசமாக உள்ளது. இது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை அவர் வெற்றிபெற்றால் 2016-ல் தொடர்ந்த பழைய வழக்கை வாபஸ் பெறுவார் என்ற உள்நோக்கத்தோடு வெற்றிபெற வைக்கப்பட்டாரா?

அதே மதுரை 'முக்கிய' அகாடமியின் இளவயதுத் துணை ஆட்சியர், தன் வெற்றிக்குக் காரணமாக மாணவி கூறும் 'கோட்டை' துணை ஆட்சியர், சமீபத்தில் வென்றவர். அந்த மாணவியின் அண்ணன், செல்வாக்கு மிக்கவர். எப்படியென்றால், துணை ஆட்சியர் பயிற்சியைக்கூட தன் சொந்த மாவட்டத்தில் முடிக்கும் அளவிற்கு செல்வாக்கானவர். அமைச்சர் மருமகனாயிற்றே! இதுகூடவா முடியாது.

இதுபோல, இன்னும் ஏராளமான கதைகள் உண்டு. மேலே கூறப்பட்ட அனைவரையும் ஏதோ ஒரு புள்ளி இணைக்கிறது. அந்தப் புள்ளிதான் இவர்கள் வெற்றி பெறுவதற்கு முழுமுதல் காரணம்.

2016-ல் முன்னாள் முதல்வர் இறப்பதற்குமுன் இலைமறை காயாக அங்கங்கே ஒன்றோ, இரண்டோ என நடைபெற்ற இம்முறைகேடுகள், அவர் இறப்பிற்குப்பின் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் குரூப் தேர்வுகள் என்னவாகும் என்பதற்குக் காலம்தான் பதிலளிக்கும். குரூப் 1 தேர்வில் ஏமாற்றமடைந்த என் போன்றவர்களின் கண்ணீரும் கனவும், கடலில் கரைத்த பெருங்காயம் போல் வீணாகித்தான் போனது. உண்மையான தேர்வர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறதே!’

பாதிக்கப்பட்டவர் என்பதால், மனவலியுடன் இவர் முன்வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை நிச்சயம் இருக்கும். ஆனாலும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரையும் அடையாளத்தையும் முடிந்த அளவு தவிர்த்துள்ளோம். ‘அப்படி எதுவும் கிடையாது.. நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள்..’ என்று யாரேனும் தங்களின் பரிசுத்தத்தை நிரூபிக்க முன் வருவார்களா? பார்க்கத்தானே போகிறோம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT