ADVERTISEMENT

சட்டவிரோத சாராய விற்பனைக்கு எதிராக பேனர் வைத்தது தவறா? காக்கிகளை வறுத்தெடுத்த நீதிபதி

08:47 AM Jul 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருவாரூர் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து பேனர் வைத்த இளைஞர் கைது செய்யப்பட்ட காவல்துறையினரை நீதிபதி கண்டித்து இளைஞரை ஜாமினில் விடுவித்திருப்பது பொதுமக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர்கண்டநல்லுரில் செயல்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் மதுபானகடை அப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களால் 2017 ம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில் தேவர் கண்டநல்லூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக காரைக்காலில் இருந்து மது பாட்டில் கடத்திவந்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அடாவடியான மது விற்பனையால் அப்பகுதி இளைஞர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், அடிக்கடி சண்டைகள் வருவதோடு, விபத்துக்களும் நடைபெறுவதாக பல முறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் சட்டவிரோத மதுவை வாங்கி குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற மாதவன், சுரேஷ், பிரவின் ஆகிய மூன்று இளைஞர்களின் மீது லாரி மோதியதில் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பலமுறை புகார் அளித்தும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி " இது தமிழ் நாடா குடிகார நாடா" என்ற வாசகம் எழுதபட்ட பேனர் ஒன்றை தேவர் கண்டநல்லூர் கடைவீதியில் வைத்துள்ளனர்.

இதைக்கண்ட காக்கிகளுக்கு கோபம் தலைக்கு ஏறி, செல்லபாண்யன், மணிகண்டன் ஆகிய இரு இளைஞர்களை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததோடு பேனரையும் அகற்றினர் .இதில் செல்லபாண்டியன் மீது வழக்கும் பதிவு செய்து நன்னிலம் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீசன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது சம்பவத்தைக்கேட்டு கோபமடைந்தவர், "பானகடைக்கு எதிராக பேனர் வைப்பது சட்டவிரோத செயலா," என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டனமும் தெரிவித்து செல்லப்பாண்டியனை அவரது சொந்த ஜாமினில் விடுதலை செய்தார்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், காக்கிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT