ADVERTISEMENT

திமுகவின் முப்பெரும் விழா திருவண்ணாமலையிலா?

08:34 PM Aug 17, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் தொடக்க விழா முப்பெரும் விழாவாக திமுக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15,16,17 என மூன்று நாளாக கொண்டாடிவருகிறது. அதன்படி 2019 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழாவை திமுக எந்த மாவட்டத்தில் நடத்தவுள்ளது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தலாமா என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாரதிதாசன் விருது, பேராசிரியர் அன்பழகன் விருது போன்றவை தமிழ் உணர்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான ஆலோசனையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது முடிவான பின்பு அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரூ நாளில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் ஆகஸ்ட் 17ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்பெரும் விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறி, அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதோடு, இதற்கான செலவை கட்சி நிர்வாகிகள் தான் செய்ய வேண்டும், யாரும் வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்களிடம் நிதி வசூலிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


தலைமையின் முறையான அறிவிப்பு வரும் முன்பே முப்பெரும் விழாவை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் இப்போதே தயாராகிவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT