ADVERTISEMENT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் அவசர சட்டம் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!   

07:27 AM Dec 23, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் வகையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சமூக பொருளாதார ரீதியான பின்தங்கிய மாணவர்களுக்கு, தரமான உயர் கல்வியை வழங்கும் நோக்கில், கடந்த 2002- ஆம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், தற்போது 124 கலைக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில், நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாததாலும், தங்கிப் படிக்க முடியாத பொருளாதார சூழலாலும், உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை உருவாகி வருவதால், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று, கடந்த செப்டம்பர் மாதம் 16- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்படத் தொடங்கும் என்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 16- ஆம் தேதியே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முத்துலெக்ஷ்மி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதலும் அளிக்காமல், அதனைத் திருப்பியும் அனுப்பாமல் காலம் தாழ்த்துவது, அவசரச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இது அரசியல் சாசன கடமை தவறும் செயலாகும். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்.’ எனக் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT