நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9- ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

chennai high court former prime minister rajiv gandhi case union government governor

அமைச்சரவை பரிந்துரை அளித்த பிறகும் கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மனுவில், பா.ஜ.க உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுனர், ஆர்.எஸ்.எஸ், கொள்கைகளை எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியல் சாசன அதிகாரங்களுக்கு முரணானது என வாதிட்டார்.

அமைச்சரவை பரிந்துரை மீது முடிவெடுக்க எந்த கால நிர்ணயமும் செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.