ADVERTISEMENT

என்னை இந்தக் கழிசடையில் தள்ளி விட்டார்களே... வேதனையைக் கொட்டும் தேசப்பிதா.

06:27 PM Feb 13, 2020 | santhoshb@nakk…

தேசப் பிதா மகாத்மா காந்தி என்று பாசத்தோடு அழைக்கும் என் நாட்டு மக்களே, ஆச்சர்யப்பட வேண்டாம். சாட்சாத் நான் மகாத்மா காந்தி தான் பேசுகிறேன். நான் கொல்லப்பட்டு 72 வருடம் கழித்து என் குரல் கேட்கிறதே என்று தானே அதிசயப்படுகிறீர்கள். வேற வழி தெரியல. என்னைச் சுற்றி நடப்பவைகளை என் நேசத்திற்குரிய மக்களிடம் சொல்லித்தானே ஆக வேண்டும். மனம் பொறுக்கல.

ADVERTISEMENT

நம் தேசம் வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டு போய்க்கிடந்தது. வன்முறையில் எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது. நாடு விடுதலை பெற, சுதந்திரமடைய, நான் சத்யாகிரக வழியில் அஹிம்சைப் பாதையில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய போது மக்களே நீங்கள் தான் என் தோளோடு தோளாக நின்றீர்கள். சூரியனே அஸ்தமிக்காத அத்தனை வல்லமையுடைய பிரிட்டிஷ்ஸாரை அஹிம்சை ஆயுதத்தால் அடிபணிய வைத்தோம்

ADVERTISEMENT

ஆடினோம். பாடினோம். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பள்ளுப் பாடினோம். இப்போது கூட எனது பழம்பெரும் மூத்த குடியான காந்தியவாதிகளே நினைவு சொல்கிறார்கள் அந்த சம்பவத்தை. சுதந்திரமடைந்த பிறகு, நான் ஜவஹர்லால் நேரு அவர்களை அழைத்து, இப்போதே உடனே காங்கிரஸைக் கலைத்து விடுங்கள். பின்னால் சரிப்பட்டு வராது என்று சொன்னதைத் தானே. ஆனால் அப்படி நடக்கவில்லை.

சரி அதை விட்டுத்தள்ளுவோம். 30.01.1948 அன்று நான் சுடப்பட்டதால் மரணமடைந்தேன். நாடே குலுங்கியது. சகஜ நிலைக்கு வந்த பின்பு என்னுடைய அஸ்தியைத் தேசத்தின் பல புண்ணிய ஷேத்திரங்களில் கரைத்தார்கள். அதன் ஒரு பகுதியை தமிழகத்தில் கரைக்க வேண்டுமென்று காங்கிரஸ் அன்பர்களும், சர்வோதய சேவாதளத் தொண்டர்களும் தென் தமிழகம் கொண்டு வந்தார்கள் அஸ்திக் கலசத்தை.

திருநெல்வேலிச் ஜில்லாப் பிராந்தியத்திலுள்ள கரிவலம் வந்த நல்லூர் எனும் ஷேத்திரம் காசி பிரயாகையை விட புனிதத்தில் கால் வீசம் அதிகம் கொண்ட ஊர். அதன் மேற்குப் பகுதியிலிருக்கும் தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லியம்மன் எனும் நாமகரணத்தில் தரையிறங்கும் அந்த ஆறு, தேசத்தின் விடுதலைக்காக முதன்முதலாக தனியொரு மாவீரனாக, தானமாகக் கேள், வண்டி வண்டியாய்த் தருகிறேன். வரி என்று கேட்டால் குன்று மணி நெல் கூடத் தரமாட்டேன் என்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடை தட்டிய நெல்கட்டான் செவல் எனும் பாளையத்தை ஆண்ட மகாசூரன், மாமன்னன் பூலித்தேவனின் பாளையம் வழியாக நிட்சேப நதி எனும் காரணப் பெயருடன் கரிவலம் வழியாக நீண்டு கிழக்கே பூமியை செழிக்க வைத்துப் பாய்கிறது. அது சாலச் சிறப்பு. அந்தக் கரிவலம் வந்த நல்லூரின் ஆற்றுக் கரையில் எனது அஸ்தியைக் கரைக்க முடிவு செய்தார்கள்.

12.02.1949 அன்று சர்வோதய சேவாதளத் தொண்டர்களும், காங்கிரஸாரும், பொது மக்களும் கூட்டம் கூட்டமாக வர, மேளதாளத்துடன் கொண்டு வந்த எனது அஸ்தியை ஆற்றுவழிப் படித்துறையில் கரைத்தவர்கள், அதன் பக்கம் எனது அஸ்தி கரைப்பு நாள், மற்றும் எனது நினைவாக ஒரு ஸ்தூபியையும் நட்டினார்கள். அன்று முதல் வருடம் தோறும் அந்த நாளில் பொது மக்களும், சர்வோதய சேவாதளத் தொண்டர்களும் கூடி வந்து என்னை நினைத்துப் பாடி தியானம் செய்து, சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள்.


நான் அரசாங்கத்தில் எந்த ஒரு உதவியையும் எதிர்பாக்கல. தேசம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் நான் அறியப்பட்ட நிலையில், கொறைஞ்சுது என்னோட அஸ்திக் கரைப்புக் கல்வெட்டுப் பகுதியைவாவது சுத்தமா வைச்சிறுக்கலாம். என்னையச் சுற்றி குப்பையும் கூளமும். நாத்தமெடுக்கும் கழிசடைக குமிஞ்சி கெடக்கு.

பாவம் சர்வோதய சேவாதளத் தொண்டர் மாரியப்பன். வருஷம்தோறும், சேவாதளத் தொண்டர்க, மக்களைத் திரட்டி இந்த இடத்தச் சுத்தம் பண்ணிட்டு என்னோட அஸ்திக் கரைப்பு நாள்ல தியானம் பண்ணிட்டுப் போறாக. அதுதேம் எனக்கு ஆறுதல்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT