ADVERTISEMENT

’அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது’ - திருமாவளவன்

01:37 AM Feb 02, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து:
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மோசடி பட்ஜெட் ஆகும். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக எப்படி மக்களை ஏமாற்றி வந்ததோ அதன் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட்டிலும் பல பொய்களை பாஜக அரசு அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

பட்ஜெட்டின் முக்கியமான மூன்று அறிவிப்புகளாக வருமான வரி வரம்பை உயர்த்துவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குதல், சிறு குறு விவசாயிகளுக்கு உதவி அளித்தல் ஆகியவை கூறப்படுகின்றன. அவை மூன்றுமே மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.

வருமான வரி வரம்பை ஆண்டுக்கு 5 லட்சமாக உயர்த்திவிட்டதாக பாஜக காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் வரி விதிப்பதற்கான ‘சிலாப்’ மாற்றப்படவில்லை. ஏற்கனவே ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என இருந்தது. இப்போது அது 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமேல் வருமானம் உள்ளவர்கள் ஏற்கனவே இருந்த சிலாபின்படிதான் வரி கட்டியாக வேண்டும். எனவே இந்த அறிவிப்பால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பயன்பெறுவார்கள்.

சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஏக்கருக்கு 4,000 என்று ஆண்டுக்கு 8000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் திட்டத்தை பார்த்து நகல் செய்துதான் இப்போது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . இந்த 6 ஆயிரமும் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. கணக்கிட்டுப் பார்த்தால் 100 நாள் வேலை செய்பவருக்கு கிடைக்கும் தொகை அளவுக்குகூட இது இல்லை.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் மிகப்பெரிய மோசடியாகும். 29 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் கட்ட வேண்டுமாம். அவர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் தருவார்களாம்.

இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் செலுத்தினால் மத்திய அரசுக்கு மாதம்தோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் வரும். அரசு கொடுக்கப்போகும் பென்ஷனைவிட இது அதிகமாகும். 10 கோடி பேர் இந்த பென்ஷன் திட்டத்தால் பயன் அடைவார்கள் என்று கூறியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் இந்தப் பென்ஷன் திட்டத்துக்காக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு ஒரு ஆண்டுக்கு எத்தனை லட்சம் பேருக்கு பென்ஷன் தரமுடியும் ?

சுமார் 30 வருட காலம் மாதம் தோறும் 100 ரூபாய் செலுத்தி அதன்பிறகு அவருக்கு பென்ஷன் கிடைக்கும் என்று சொல்வது மிகப்பெரிய மோசடி அல்லாமல் வேறொன்றுமில்லை.

தங்களால் நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டிலும் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் மோடி அரசு வெளியிடவில்லை. இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

மோடி அரசின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் இடைக்கால பட்ஜெட் என சொல்லி தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டியதை எல்லாம் அதில் கூறியிருக்கிறார்கள். அப்படி சொல்லும்போது கூட நேர்மையாக எதையும் சொல்லவில்லை.
அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது.

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்கிற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பால் நிலைகுலைந்து போய் இருக்கும் மோடி அரசு மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு மோசடி பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இதை இந்திய மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. ஐந்தாண்டு காலமாக தங்களை ஏமாற்றிய பாஜக அரசுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT