
மே 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றம் இறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ’’மே மூன்றாம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல் திட்டத்தின் வரைவை சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு வார காலஅவகாசம் கேட்டு இன்று மத்திய அரசு மனுதாக்கல் செய்திருக்கிறது. இது பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்ட காலக்கெடுவையும் மத்திய அரசு மதிக்கவில்லை. கெடு முடியும் நேரத்தில் மூன்று மாதகால அவகாசம் கேட்டார்கள். உச்சநீதிமன்றமும் கடிந்துகொள்வதுபோல் பாவனை செய்துகொண்டு அந்த அவகாசத்தை வழங்கியது. ‘ஸ்கீம்’ என்ற சொல்லுக்கு விளக்கம் வேண்டுமென்று கேட்டார்கள். அது மேலாண்மை வாரியம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் சொல்லாமல் சொல்லிவிட்டது. இப்போது இரண்டுவார கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள். இதை இன்றே உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் மாறாக மூன்றாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் கூட்டுசேர்ந்து கொண்டு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
காவிரியில் 2018 ஜனவரி முதல் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 10.5 டிஎம்சி தண்ணீரில் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு கொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு தரவேண்டியதிலும் 68 டிஎம்சி பாக்கியுள்ளது. இதையெல்லாம் கேட்பதற்கு தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை. தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் துரோகத்துக்கு தமிழக அரசும் துணை போவதாகவே உள்ளது.
மே 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றம் இறுதிசெய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு கால அவகாசம் எதுவும் வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.’’