ADVERTISEMENT

திருக்காரவாசலில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

05:58 PM Jan 31, 2019 | rajavel



எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கிறது.

ADVERTISEMENT

திருக்காரவாசலை மையமாகக்கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் காவல்துறை பொதுமக்கள் மீது வழக்குப் பதிந்து மிரட்டி வருகின்றது. காவல்துறையின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக நெடுவாசலில் அந்த திட்டத்தை செயல்படுத்தவிருந்த நிறுவனம் பின்வாங்கியது. தொடர்ந்து தமிழக அரசும் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதியளித்தது.

ஆனால், தமிழக விவசாயிகளின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் மதிக்காத மத்திய பாஜக அரசு, மீண்டும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனையும் மத்திய அரசின் நடவடிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆகவே, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் இந்த திட்டத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதோடு, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் பூதங்கள் விவசாயிகளை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT