ADVERTISEMENT

'இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டுவர திட்டமா?'-எம்.பி ராசா பரபரப்பு பேச்சு

12:33 PM Mar 24, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில்திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (லால்குடி) சௌந்தரபாண்டியன், (மண்ணச்சநல்லூர்) கதிரவன், (துறையூர்) ஸ்டாலின் குமார், (பெரம்பலூர்) பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், தர்மன் ராஜேந்திரன் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா பேசுகையில், ''வர இருக்கின்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்க கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு மொழியை சிதைத்தால் ஒரு சமூகத்தை ஒரு மாநிலத்தை சிதைக்க முடியும். அந்த வகையில் இந்தி எனும் மொழியை இந்தியாவின் ஒட்டுமொத்த மொழியாக மாற்ற பாரதிய ஜனதா கட்சி துடிக்கிறது. எனவே இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்றார்.

எம்பி ராசா பேசுகையில், 'பாரதிய ஜனதா கட்சி அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் எனக்குள் ஏற்படுகிறது. கேள்வி நேரத்தின்போது பாரத பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வருவதில்லை அவ்வாறு வந்தால் தான் நாட்டில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை அவர் அறிந்து கொள்ள முடியும். நாட்டில் உள்ள பிரச்சனைகள் எதையும் அறியாமல் அவர் ஊர் சுற்றும் ஒரு பிரதமராக உள்ளார். நாட்டு மக்களை அடிமையாக்க துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்க வேண்டும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பை உறுதி படுத்த வேண்டும்'' என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், 'தமிழக முதல்வர் கட்டமைத்துள்ள இந்தியா கூட்டணி மிகப்பெரிய மகத்தான வெற்றியை சந்திக்க இருக்கிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண் நேரு மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு, ''பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு ஆகும். அரசியல் பணிகளை அருகில்நின்று பார்த்து உள்ளேன். ஆனால் தற்போது அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளேன். எனவே வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்'' என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ''பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெறுவதற்கு நீங்கள் முழுமையாக பாடுபட வேண்டும்.செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த அனைவருக்கும் நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்வில் கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT