Minister KN Nehru says DMK Youth Conference will make India look back

Advertisment

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டு சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று (18-01-24) காலை தொடங்கி வைத்தார். மேலும், அங்குள்ள அண்னா, பெரியார் மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சேலத்தில் நடைபெறவிருக்கிற மாநாட்டுப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “திமுக மாநில மாநாடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும். தமிழகம் முழுவதும் 10,000 பேருந்துகள், 50,000 வேன்கள், அதுதவிர கார்கள், லாரிகள் என சுமார் 8 லட்சம் பேர் இந்த மாநாட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் செய்து இருக்கிறோம். மேலும், 3,000 ட்ரோன்கள் ஷோ நடக்கிறது. மாநாட்டில் இளைஞர் அணியினர் ஒரே மாதிரியான சீருடையில் அணிவித்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Advertisment

தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாநாட்டில் நோக்கம், கட்சியில் உள்ள இளைஞர்களின் பொறுப்பு என்ன என்பதை பற்றி கூட்டம் வாயிலாக பேசி வருகிறார். எனவே, அனைத்து மாவட்ட இளைஞர் அணியினரும் உற்சாகமாக மாநாட்டுக்கு வர இருக்கிறார்கள். இந்த மாநாட்டு ஏற்பாடு திமுகவினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த மாநாடு, மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாநாடாக இருக்கும்” என்று கூறினார்.