ADVERTISEMENT

“ரூ.8 லட்சம் வாங்கிக்கொடு! குழந்தை பாக்கியம் தருகிறேன்!”  -மனைவியை மிரட்டிய மோசடி மன்னன் மாரியப்பன்!

08:08 PM Jun 20, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மோசடி கணவன் என்ற பட்டத்துக்கு மிகப்பொருத்தமான ஆளாக இருக்கிறார் மாரியப்பன். தேனி மாவட்டம் – சின்னமனூர் தாலுகா – புலிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த அவர், தன் மனைவியிடம் என்னென்ன மோசடி செய்திருக்கிறார் என்று பார்ப்போம்!

ADVERTISEMENT


எம்.எஸ்சி., எம்.பில். பி.எச்டி. படித்து முடித்துவிட்டு, ராஜஸ்தான் ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், ரூ.70000 சம்பளத்தில், சீனியர் பயோ கெமிஸ்ட் (உயிர் வேதியியல் வல்லுநர்) வேலை பார்ப்பதாகச் சொல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வியை திருமணம் செய்திருக்கிறார். கல்வி மற்றும் வேலைத்தகுதியைக் காரணம் காட்டியே 120 பவுன் நகைகளை வரதட்சணையாக வலியுறுத்தி வாங்கியிருக்கிறார். திருமணமான சில நாட்களிலேயே, குடும்பக் கடனை அடைக்கவேண்டும் எனச்சொல்லி, ரூ.8 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்.

பாண்டிச்செல்வி தயங்கிய நிலையில், ரூ.8 லட்சம் வாங்கி வந்தால்தான் உனக்கு குழந்தை பாக்கியம் தருவேன் என்று மிரட்டியிருக்கிறார். மகளின் குடும்ப வாழ்க்கையை நினைத்தும், தங்களுக்கு ஒரு பேரக்குழந்தை வேண்டும் என்ற எண்ணத்திலும், பாண்டிச்செல்வியின் பெற்றோர், வட்டிக்கு ரூ.8 லட்சம் கடன் வாங்கி, மாரியப்பனுக்குக் கொடுத்திருக்கின்றனர். கேட்ட பணம் கைக்கு வந்து, குடும்ப வாழ்க்கை நடத்தியதால், பாண்டிச்செல்வி கருவுற்றிருக்கிறார்.

இந்த சந்தோஷ தருணத்தில் பணம் பறிக்கும் அடுத்த திட்டம் மாரியப்பன் மனதில் உதித்தது. கோவை மாவட்டத்தில் சப்-கலெக்டர் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பானை வந்திருக்கிறது. அந்த அரசு வேலையைப் பெறுவதற்கு உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி, பாண்டிச்செல்வியின் 60 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டார். அடுத்து, பாண்டிச்செல்விக்கு ஆத்விக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மாரியப்பனின் பெற்றோரோ, ‘என் மகன் இப்போது டெபுடி கலெக்டர் ஆகிவிட்டான். கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சனை தரவேண்டும்.’ என்று முரண்டு பிடித்து பாண்டிச்செல்வியை அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர்.

குழந்தையைப் பார்க்க சென்னையிலிருந்து வந்த மாரியப்பனிடம், அவருடைய பெற்றோரிடம் தான் படும் அவஸ்தையை பாண்டிச்செல்வி கூற, ‘நீ மகாராஜபுரத்தில் உள்ள உன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடு. நிலைமை சரியானதும் நானே வந்து அழைத்துச்செல்கிறேன்.’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். அடுத்த திட்டம் உதித்தது.

பாண்டிச்செல்வியின் அண்ணன் உதயகுமார் திருமண விஷயமாகப் பேச்சைத் தொடங்கியிருக்கிறார் மாரியப்பன். ‘பெண் வீட்டார் மிகவும் பெரிய இடம். மாப்பிள்ளை அரசு உத்தியோகம் பார்க்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். அதனால், தமிழ்நாடு சுற்றுலா துறையில் தனக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் மூலம் உன் அண்ணனுக்கு அரசு வேலை வாங்கித்தருகிறேன். ரூ.8 லட்சம் தந்தால் வேலை உறுதி’ எனச்சொல்லி, பாண்டிச்செல்வியின் பெற்றோரிடம் பணம் கறந்திருக்கிறார். அவர் சொன்னபடியே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை திருநெல்வேலி மற்றும் கோவையிலிருந்து உதயகுமாருக்கு வேலை நியமனத்திற்கான உத்தரவு இ-மெயிலில் வந்திருக்கிறது. உடனே வேலையில் சேர்வதற்காகச் உதயகுமார் சென்றிருக்கிறார். பிறகுதான் தெரிந்திருக்கிறது, அத்தனையும் போலி என்று.


மாரியப்பனின் கல்வித்தகுதி, ராஜஸ்தான் எய்ம்ஸ் வேலை, டெபுடி கலெக்டர் வேலை என அத்தனையுமே பொய்தான் என்று தெரிந்தவுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் பாண்டிச்செல்வி. மோசடி மன்னன் மாரியப்பன் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.


குடும்ப கலாச்சாரம் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்ற சமுதாய நோக்கத்தைச் சிதைக்கும் மாரியப்பன் போன்ற மோசடிப் பேர்வழிகள் நம்மிடையேதான் உள்ளனர். உஷாராக இருக்கவேண்டும்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT