ADVERTISEMENT

குடிமராமத்து குளத்தில் புதையலாக கிளம்பும் தாழிகள்!!! பாதுகாப்பு வளையமிட்ட இளைஞர்கள் ஆய்வு செய்ய கோரிக்கை...

09:28 PM Jun 08, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புதையுண்டு கிடக்கிறது. கீழடியில் தமிழ் எழுத்து கிடைத்துள்ளது உலக தமிழர்களை தலைநிமிரச் செய்தது. அடுத்தடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மிருகத்தின் எழும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொல்பொருள் புதையுண்டு கிடப்பதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்களை நாடியுள்ளனர் தொல்லியல் ஆர்வலர்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு – தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட அம்பலத்திடல் என்னும் இடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்வன்னி ஆற்றங்கரையில் கருப்பு சிவப்பு முதுமக்கள் தாழிகள், தாழிகளுக்குள் எழும்புகள், சிறு சிறு பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களிலும் பரவியுள்ளது. பழங்கால செங்கல், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி என பல பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் கிடைக்கும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளம் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக நடந்து வரும் நிலையில் சில அடி ஆழத்தில் பழமையான கருப்பு சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்படத் தொடங்கி உள்ளது. பல தாழிகள் உடைந்து பாதி அளவில் உள்ளது. இதைப் பார்த்த கிராம இளைஞர்கள் தாழிகளை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தாழிகள் காணப்பட்ட இடங்களை சிவப்பு கொடி நட்ட பாதுகாத்து வருகின்றனர்.


இது குறித்து அப்பகுதி கிராம இளைஞர்கள் கூறும் போது.. புதைந்துள்ள தமிழர்களின் வரலாறுகள் இப்படி தோண்டத் தோண்ட வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் எங்கள் கிராமத்தில் கிடைத்துள்ள தாழிகளை ஆய்வு செய்வதுடன் மேலும் ஏதேனும் வரலாற்று சான்றுகள் கிடைக்கிறதா என்பதை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும். அதனால்தான் தாழிகள் கிடைத்த பகுதியில் மராமத்துப் பணிகளை நிறுத்தி வைத்து கொடி நட்டு பாதுகாத்து வருகிறோம். இதுகுறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம். இது குறித்து ஆய்வு செய்ய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆய்வு செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.


இந்த தாழியை பற்றி பல தொல்லியல் ஆய்வுகள் செய்துள்ள ஆய்வாளர்களிடம் கருத்து கேட்ட போது..

இந்த தாழியை (படமாக) பார்க்கும்போது சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக தெரிய வருகிறது. இந்த தாழிகள் முதுமக்கள் தாழியாகவும் இருக்கலாம் அல்லது தானிய குதிராகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது தாழியாக இருந்தால் அது புதைவிடமாக இருக்கலாம். புதைவிடமாக இருந்தால் அதிலிருந்து சற்று தூரத்தில் மக்களின் வாழ்விடம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அல்லது தானிய குதிராக இருந்தால் அதில் பழைய நெல் மணிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் மிகத் துள்ளியமாக ஆய்வு செய்தால் தமிழர்களின் கலாச்சாரம், வரலாற்றை அறியலாம் மேலும் பானைகளில் எழுத்துகள் இருக்கிறதா என்பதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். வரலாற்றை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். ஆய்வாளர்கள் விரைந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT