சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே பாப்பாகுடியில் 1000 ஆண்டுகள் பழமையான யானைச் சின்னம் உள்ள சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வேலூரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் மூவேந்தன், தனது ஊரான பாப்பாகுடி சமயன் கோயிலில் யானை சின்னம் உள்ள சூலக்கல் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடி புலவர் காளிராசா ஆகியோர் அவ்வூரைச் சேர்ந்த ராமக்கண்ணன் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

சூலக்கல்மன்னர்கள் காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்குத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம், தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, பௌத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

 soolakkal discovered with Elephant symbol in Sattarasankottai

Advertisment

இவ்வாறு சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். இதுவே திருமால் கோயில் எனில் சங்கு, சக்கரமும், சமணப் பள்ளி எனில் முக்குடையும், பௌத்தப் பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். பாப்பாகுடி சமயன் கோயிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் மக்கள் வழிபாட்டில் உள்ளன.

சூலக்கல் அமைப்பு

சமயன் கோயிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், 1½அடி அகலம் உள்ள கருங்கல்லால் ஆனது. இதன் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கிச் செல்லும் யானையின் சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவம் உள்ளது. இக்கல்லில் யானைச் சின்னம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப்படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டுவைக்கப்பட்டதாக இதைக் கருதலாம்.

 soolakkal discovered with Elephant symbol in Sattarasankottai

அத்திகோசத்தார்

Advertisment

வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப்படையினர் அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடன் இருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்களைப் பற்றி முதன்முதலில் பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பாகுடியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள காளையார்கோயில், மதுரை தொண்டி வணிகப்பெருவழியில் இருந்துள்ளது. இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப்படையினர், அவ்வூர் சிவன்கோயிலுக்கு பாப்பாகுடியை தானமாக வழங்கி இருக்கலாம். தானமாக வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். சோழர்கால கலைப்பாணியில் உள்ளதால் இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இதேபோல் சோழர்காலத்தைச் சேர்ந்த காளைச் சின்னம் உள்ள நான்முக சூலக்கல்லை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் புதுக்கோட்டை அருகே வாழமங்கலத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.