ADVERTISEMENT

''மூன்றாவது கணவனின் சொத்துக்காக குழந்தையை திருடினேன்''-பரபரப்பை கிளம்பிய சம்பவத்தில் பகீர் வாக்குமூலம்!

10:15 PM Oct 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை பர்மா காலனி கூலித் தொழிலாளி குணசேகரன் ராஜலட்சுமியை காதல் திருமணம் செய்ததால் இரு குடும்பங்களின் ஆதரவின்றி பிரசவத்திற்காகத் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க் கிழமை பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், ''உனக்குத் தாயாக நான் இருக்கிறேன்'' என்று அன்பும் ஆதரவும் காட்டிய ஒரு பெண் வெள்ளிக்கிழமை காலை ராஜலட்சுமி குளியலறைக்குச் சென்ற பிறகு குழந்தையை ஒரு பச்சை கட்டைப் பையில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்த, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க டி.எஸ்.பி கபிலன் தலைமையில் 3 தனிப்படை போலீசாரை நியமித்துத் தேடும் பணியை முடுக்கிவிட்டிருந்தார் மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா.

தொடர்ந்து ராஜலட்சிமியிடம் நடத்திய விசாரணையில், கடைசியாக குழந்தையின் அடையாள எண் உள்ள அட்டை ஒன்று அந்தப் பெண் வாங்கிச் சென்றார் என்று கூறியுள்ளார். அந்த அடையாள எண் கொண்ட அட்டையை மருந்தகத்தில் தான் பயன்படுத்த முடியும் என்பதால் உடனே போலீசார் மருந்தகத்தில் குவிந்திருந்த அடையாள அட்டைகளை ஆய்வு செய்தபோது அதில் எழுதி இருந்த செல்போன் எண்ணை எடுத்து முகவரி பார்த்தபோது பட்டுக்கோட்டை முகவரி காட்டியுள்ளது. உடனே பட்டுக்கோட்டை டி.எஸ்.பி செங்கமலக்கண்ணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி டீம் சம்மந்தப்பட்ட செல்போன் எண்ணைப் பயன்படுத்தும் பெண்ணை அழைத்து விசாரித்த போது எனக்கும் குழந்தை திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார். அப்போது குழந்தை திருடிச் சென்ற பெண்ணின் சிசிடிவி படத்தைக் காட்டியபோது அந்த பெண்ணின் சேலை கலரைப் பார்த்தவுடன் இது என் தோழி விஜி எனத் தெரிவித்துள்ளார். விஜிக்கு குழந்தை பிறந்திருப்பதாக சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டே விஜியுடன் அந்தப் பெண் இருக்கும் படத்தையும் காட்டியுள்ளார்.

பட்டுக்கோட்டை போலீசாருடன் தஞ்சை போலீசாரும் இணைந்து விரைந்து சென்று பாலமுருகன் என்பவர் வீட்டிலிருந்த விஜி மற்றும் கடத்தி வரப்பட்ட குழந்தையை மீட்டனர். உடனே குழந்தையைப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தனர். விஜியை கைது செய்துள்ளனர்.

விஜி போலீசாரிடம் கூறும் போது, ''என் 3 வது கணவர் பாலமுருகன். (அவருக்கு நான் 2 வது மனைவி) பாலமுருகனுக்கு குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டேன். ஆனால் கர்ப்பமாகல. அதனால அவரோட சொத்துகள் வேறு யாருக்காவது போய்விடுமோ என்ற கவலை எனக்கு. அதனால கடந்த 10 மாதமாகக் கர்ப்பமாக இருப்பது போல வயிற்றில் துணியைக் கட்டி நாடகமாடினேன். போன வாரம் பிரசவத்திற்காக தஞ்சாவூர் போறதா சொல்லிட்டு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு போனேன். அங்கே தான் யார் ஆதரவும் இல்லாமல் ராஜலட்சுமி தனியாக பிரசவமாகி தவிப்பதைப் பார்த்து நட்போட பழகி, கூட இருந்து கவனித்துக் கொண்டேன். வெள்ளிக்கிழமை ராஜலட்சுமி பாத்ரூம் போன நேரத்தில் குழந்தையைக் கட்டைப் பையில் வைத்துத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏறி புது பஸ் ஸ்டாண்ட் போய் பட்டுக்கோட்டை வந்துட்டேன். எனக்கு குழந்தை பிறந்திருக்குனு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். மெடிக்கல்ல பேம்பர்ஸ் வாங்கும் போது போன் நம்பர் கேட்டாங்க என் நம்பர் கொடுத்தா மாட்டிக்குவோம்னு என் தோழி நம்பரைக் கொடுத்துவிட்டு வந்தேன்'' என்று கூறியுள்ளார்.

குழந்தை திருடுபோய் 30 மணிநேரத்தில் மீட்கப்பட்டதால் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மீட்கப்பட்ட குழந்தை குணசேகரன்-ராஜலட்சுமியிடம் ஒப்படைத்த போது போலீசாரின் காலில் விழுந்து நன்றி கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT