ADVERTISEMENT

எஸ்.பி. வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி

12:00 PM Aug 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு விசாரித்தது. இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எஸ்.பி. வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி. வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அதனோடு தொடர்புடைய எங்கள் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என 5 நிறுவனங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், “இந்த நிறுவனங்களுக்கு எதிரான விசாரணை முடிந்துள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தங்கள் தரப்பு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது” எனத் தெரிவித்து 5 நிறுவனங்கள் சார்பாகத் தொடரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை 6 வாரங்களில் தாக்கல் செய்யவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT