ADVERTISEMENT

கோ தானத்தில் வரும் பசுக்களை புரோக்கர்கள் மூலம் விற்கும் கோவில் ஊழியர்கள்?-நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை!!

10:35 PM Jul 30, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாவது வருமானம் உள்ள அருள்மிகு கோபிநாதசுவாமி கோவில், பாழடைந்து வருகிறது. அன்னதானம் நடைபெறாமல் கோவில் ஊழியர்களுக்கு மட்டும் பொட்டலங்களில் உணவுகள் வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் ‘கோ’ தானத்திற்கு பசுவுடன் வரும் பக்தர்களிடமிருந்து பசுக்களை பெற்றுக் கொண்டு புரோக்கர்கள் மூலம் பசுக்கள் விற்கப்படுகிறது போன்ற குற்றச்சட்டுகளை பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். மேலும், அங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், திருப்பணி நடத்தினால்தான் கோவில் ஏலத்தை நடத்த விடுவோம் எனவும் காமாட்சிபுரம் ஊராட்சி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக வருவாய் ஈட்டும் கோவிலாக ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் இருந்து வந்தது. 619அடி உயரத்தில் உள்ள இந்த கோபிநாதசுவாமியை படிகளின் வழியாக ஏறிச்சென்று தரிசனம் செய்யும்படியாக மலை மீது கோவிலை அமைத்துள்ளனர். இக்கோவிலின் உபகோவிலாக ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து நான்கு வருடங்களாக பல்வேறு முறைகேடுகள் நடை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நான்கு வருடங்களாக இக்கோவிலில் திருப்பணி செய்யக்கோரி காமாட்சிபுரம், எல்லப்பட்டி, கட்டசின்னாம்பட்டி உட்பட பல கிராம மக்கள் கோரிக்கைவிடுத்தும் கோவில் செயல் அலுவலர் கண்டு கொள்ளவில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும், இதுதவிர கோவிலில் அன்னதானம் நடைபெறாமல் கோவில் ஊழியர்களுக்கு மட்டும் உணவு பொட்டலங்களை வழங்கி அன்னதானம் வழங்கி வருவதாக கணக்கு காண்பித்து வருவதாக புகார் செய்துள்ளனர். இது தவிர கோவிலுக்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் ‘கோ’ தானத்திற்காக வெளி மாவட்ட பக்தர்கள் வரும்போது அவர்களிடமிருந்து தானமாக பெரும் பசுக்களை கோவில் சார்பாக பெற்றுக்கொண்டு அவற்றை புரோக்கர்கள் மூலம் 40ஆயிரம் முதல் 80ஆயிரம் ரூபாய் வரை விற்றுவிட்டு கோவில் உண்டியலில் ரூ.500 மட்டும் போடுவதாக காமாட்சிபுரம் ஊராட்சி பொது மக்கள் புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள கோவில் நிர்வாக அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் செயல் அலுவலர் கணபதி முருகன் முன்னிலையில் ஏலம் நடைபெற்ற போது, காமாட்சிபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் கணேஷ்பிரபு, கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், எல்லை இராமகிருஷ்ணன், எல்லப்பட்டி கோபி, ஊர்பெத்தகாப்பு கர்ணன், எல்லைப்பட்டி ஊர்தலைவர் கோதண்டபானி, ஊர்கவுண்டர் முருகபெருமாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஏலம் நடைபெறும் இடத்திற்கு வந்து ‘கிராம மக்கள் சார்பாக நான்கு வருடங்களாக கோவிலில் திருப்பணி நடைபெறவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை இல்லை. கோவிலுக்கும் வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி கிடையாது. திருவிழா காலங்களில் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைக்கும் பொங்கத்துறையை சுத்தம் செய்து செட் அமைக்கவில்லை. கோவிலுக்கு காணிக்கையாக வரும் மாடுகளை புரோக்கர்கள் மூலம் விற்றுவிட்டு ரூ.500 மட்டும் உண்டியலில் போடுகிறீர்கள். ரூ.80 ஆயிரத்திற்க்கு மாடு விற்றாலும் ரூ.500தான் கோவில் நிர்வாகத்திற்கு வருகிறது’ என இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா முன்பு புகார் செய்து ஏலத்தை புறக்கணித்தனர்.

இது தவிர கோவிலில் மூலவருக்கு பூஜை நடைபெறும்போது நாதஸ்வரம் வாசிப்பது வழக்கம். கடந்த 4 வருடங்களாக தவில்வாசிப்பவர் ஓய்வு பெற்ற பிறகு புது ஆட்களை நியமிக்கவில்லை. சுவாமிக்கு பூஜை நான்கு வருடங்களாக மங்கள வாத்தியம் இல்லாமல்தான் நடைபெறுகிறது. இது தெய்வ குற்றம் ஆகாதா? என உதவியாளர் அனிதாவிடம் கேட்டனர். தனக்கு ஒன்றும் தெரியாது என அனிதா மழுப்பலாக கூறினார். இதனை அடுத்து அவர்கள் ஏலம் நடத்தினால் காமாட்சிபுரம், கட்டசின்னாம்பட்டி, இராமலிங்கபட்டி, கோட்டைப்பட்டி, எல்லைப்பட்டி கிராம மக்கள் சார்பாக கடையை நாங்கள் போடு வோம் பிறகு எப்படி ஏலம் நடத்து பவர்கள் கடை நடத்த முடியும் என கூறிவிட்டு ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமியிடம் புகார் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்தனர்.

ஒன்றிய பெருந்தலைவரிடம் புகார் செய்த கிராம மக்கள் செயல் அலுவலர் கணபதி முருகனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்ததில் நான்க வருடங்களாக திருப்பணி நடைபெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டு ரூ.8 கோடி கோவில் நிதி வங்கியில் இருப்பதாக கூறினார். அப்போது பேசிய ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, “ஏலம் விடும்போது முறையாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். யாருக்கும் தெரியப்படுத்தாமல் ஏலம் நடத்துவது நியாயமா? கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவில் திருமண மண்டபத்திற்கு கட்டணம் வசூல் செய்கிறீர்கள். கழிப்பறை வசதி இருக்கிறதா? தண்ணீர் வசதி இருக்கிறதா” என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் கணபதி முருகன், “விரைவில் குறைகளை நிவர்த்தி செய்கிறேன்” என்றார்.

இதுசம்பந்தமாக எல்லப்பட்டி இராமகிருஷ்ணன் கூறுகையில், “கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரெட்டியார்சத்திரத்திலிருந்து 3கி.மீ தூரம் நடந்து வருகிறார்கள். வரும் வழியில் எந்த இடத்திலும் தண்ணீர் வசதியோ, கழிப்பறை வசதியோ கிடையாது. மலைமேல் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான கொட்டகைக்கூட இல்லை. சுவாமிக்கு பள்ளியறை இல்லை. அர்ச்சனை கட்டணம் ரூ.5க்கு பதிலாக ரூ.10 முதல் ரூ.15வரை கூடுதலாக வசூல் செய்கிறார்கள்” என்று கூறினார்.

இதுபற்றி ஊர் பெத்தகாப்பு கர்ணன் கூறுகையில், “நான்கு வருடங்களாக கோவில் அடிவாரத்தில் உள்ள பொங்கத்துறையை சுத்தம் செய்து கொட்டகை அமைத்து கொடுங்கள், அண்ணதான கூடத்தில் முறையான சாப்பாடு கொடுக்காமல் கோவில் ஊழியர்களுக்கு மட்டும் பொட்டனம் சாப்பாடு கொடுக்கிறார்கள். அதுபோல் கோபிநாத சுவாமி மலைக்கோவிலில் நாதஸ்வரம் ஊதும் சிவராஜன் என்பவர்தான் கோவில் செயல் அலுவலர் போல் நடந்து வருகிறார். அலுவலக கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கு யார் அவருக்கு அனுமதி கொடுத்தது. இந்து அறநிலையத்துறை ஆணையாளர்கள் இது வரை மலைக்கோவிலுக்கு வந்தது கிடையாது. அடிவாரத்தில் உள்ள அலுவலகத்திற்கு மட்டும் வந்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதிக்கு ஒருமாதத்திற்கு முன்பு மனு கொடுத்தும் எந்த ஒரு விசாரணையும் இல்லை. கோவில் சொத்தை கொள்ளையடிப்பதைதான் பார்க்க முடிகிறது. அதுபோல் பொய் கணக்குகளை எழுதி இலட்சகணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தகுந்த விசாரணை செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதியை நாம் தொடர்பு கொண்டபோது, இது தொடர்பாக புகார் மனுக்கள் வந்துள்ளதாகவும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT