ADVERTISEMENT

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியை.. பூட்டுப்போட்ட பெற்றோர்கள்

06:43 PM Jun 19, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 3 ந் தேதி திறக்கப்பட்டு நடந்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைக்க குடிதண்ணீர் கூட இல்லாமல் அரசுப் பள்ளிக்குப் போகும் மாணவர்களுக்கு அரசு இன்னும் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் செப்பல்கள் கொடுக்கவில்லை. கிராம பள்ளிகளின் தேவைகளை அந்தந்த கிராம இளைஞர்களே பூர்த்தி செய்து கொடுத்தாலும் ஒரு சில பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவில்லை.

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ளது கொல்லன்வயல் கிராமம். சுமார் 200 குடும்பங்கள் வசிக்கிறார்கள். ஊருக்குள்ளேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. புயல் தாக்கி ஒரு கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. விடுமுறை நாட்களில் அதை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. அரசுப் பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான ஸ்மார்ட் வகுப்பறை, கணினி, புரஜெக்டர், இப்படி பல உபகரணங்களை சொந்த செலவில் வாங்கி கொடுத்ததுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் கிராமத்தார்கள் இணைந்து இரு ஆசிரியர்களையும் நியமித்தனர்.

கிராமத்தால் நியமிக்கப்பட்ட இரு ஆசிரியர்களின் சம்பளத்திற்காக ரூ ஒரு லட்சம் பணத்தையும் கொடுத்தார்கள். இத்தனை வசதிகளையும் செய்த பிறகு வீடுவீடாக சென்று மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி பள்ளிக்கு வராததால் உதவி ஆசிரியருடன் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்களே வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வராத தலைமை ஆசிரியையால் பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப தொடங்கிவிட்டதால் முன்னாள் மாணவர்கள் அதிகாரிகளை சந்தித்து தலைமை ஆசிரியை பள்ளிக்கு வரவேண்டும் அல்லது அவரை இடமாற்றம் செய்து மாற்று தலைமை ஆசிரியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இன்று புதன் கிழமை பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியை இல்லாத பள்ளியை திறக்க வேண்டாம் என்று பள்ளியை பூட்டு போட்டு பூட்டினார்கள். அதன் பிறகு வந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு பள்ளி திறக்கப்பட்டது.


இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறும் போது.. நாங்கள் படித்த அரசுப்பள்ளி எங்கள் கண் முன்பே மூடிவிடக்கூடாது என்பதால் எங்கள் சொந்த செலவில் பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்தோம். கூடுதலாக இரு ஆசிரியர்களை நியமித்தோம். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியை தொடர்ந்து வராததால் அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதாக சொன்னவர்கள் தனியார் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். இதனால் எங்கள் உழைப்பும் பணமும் வீணாகிறது. அதனால் தான் இன்று பெற்றோர்கள் பள்ளியை பூட்டினார்கள்.
அதே போல புயலில் ஒரு பள்ளி கட்டிடம் சேதமடைந்து சுவர்கள் மட்டுமே உள்ளது. அதனால் வகுப்பறை பற்றாக்குறையும் உள்ளது. அதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT