dddd

Advertisment

இந்தியாவில் கல்வி தரத்தில் முதலிடம் வகிக்கும் டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு, சமீபத்தில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியிருந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த கூட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15,000 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவதற்கான மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலுள்ள பகுதி நேர ஆசிரியர்களை எடப்பாடி அரசு நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன்.

இது குறித்து வெளியிடுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், தொகுப்பூதியம் அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொகுப்பூதிய தற்காலிக ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட போது 5,000 ரூபாய் தொகுப்பூதியமாக இருந்தது. பின்னர் ஊதிய உயர்வாக ரூபாய் 2000 கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2014-ல் 700 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு தற்பொழுது 7,700 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

இது, தமிழக அரசு நிர்ணயத்துள்ள தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலித் தொகையை விட குறைவானது. ஆனால் படித்து பட்டம் பெற்று ஆசிரியர்களாக வருபவர்களுக்கு ரூபாய் 7700 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வினோதமாக உள்ளது.

இவ்வளவு குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் பணி செய்வது என்பது மிகவும் சிரமமானதாகும். ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இதை தமிழக அரசு உணர வேண்டும்.

ஆகவே தமிழக கல்வித்துறை இனியும் தாமதிக்காமல் ரூபாய் 7700 மட்டுமே பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் நிரந்தர பணி ஆசிரியர்களாக உடனடியாக நியமிக்க வேண்டும்.

Advertisment

பகுதி நேர ஆசிரியர்கள்பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்த போது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மூன்று மாதத்திற்குள் ஒரு குழு ஆரம்பித்து அதற்கான தீர்வு காணப்படும் என்று கடந்த 2017 ம் ஆண்டு ஜுன் மாதம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் , இதுவரை பள்ளிக்கல்வித்துறை எந்த ஒரு முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.

புது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், அவசர சட்டம் நிறைவேற்றி 15,000 பகுதி நேர ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்ததுபோல் , தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றி வாழ்வதற்கே அவதிப்படும் தற்போதுள்ள பகுதிநேர ஒப்பந்த ஊதிய ஆசிரியர்களை நிரந்தர பணி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் " என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் வசீகரன்.