ADVERTISEMENT

டாஸ்மாக் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கோரிய வழக்கு முடித்து வைப்பு!

11:12 PM Jul 21, 2020 | rajavel

ADVERTISEMENT

பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கோரிய வழக்கை முடித்துவைத்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா ஊரடங்கு காலத்திலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க, தமிழக அரசு மே மாதம் அனுமதி அளித்தது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர், மதுபானக் கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரைக் குறைக்க வேண்டுமென்றும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும், கரோனா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்தும்படி உத்தரவிட வேண்டும் என கோவையைச் சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் பன்னீர் செல்வம் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ.டி.சாம்சனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக போதிய காவலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதுதவிர, ரேசன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, அத்தியாவசியத் தேவைகளுக்காக, மக்கள் நடமாட்டம், கரோனா தாக்குதலில் கடடுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், சோதனைச் சாவடி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளிலும், காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 583 பேரும், பிற பணிக்கு 7,749 பேரும்; மத்திய மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 363 பேரும், பிற பணிக்கு 5 ஆயிரத்து 295 பேரும்; மேற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 887 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 954 பேரும்; தெற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 764 பேரும், பிற பணிக்கு 11 ஆயிரத்து 876 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 410 பேரும், பிற பாதுகாப்பு பணிகளுக்கு 10,545 பேரும் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழகத்தில், பிற பணிகளுக்கு 43,119 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 3,007 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர, கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 9,326 ஆண்கள், 2,059 பெண்கள் என, 11,385 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக, உதவி ஐ.ஜி. சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT