ADVERTISEMENT

அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் - த.வா.க. தலைவர் வேல்முருகன் கோரிக்கை!

04:48 PM Jul 06, 2020 | kalaimohan

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி பிழைப்புக்காக பல வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

விமான போக்குவரத்தும் தடை விதித்துள்ளதால் நாடு திரும்பவும் அவர்களால் முடியவில்லை. எனவே வேலையின்றி, சம்பளமின்றி, உணவுக்கும் வழியின்றி அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து பல மாதங்களாக, பல வேளைகளில் பட்டினி கிடக்கின்றனர்.

இந்நிலையில் அயல்நாடுகளில் அல்லல்படும் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி நலவாரியமும், தனி அமைச்சகமும் உடனே அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு நாடுகளில் நேற்று இணைய வழியாகவும், அவரவர் இருக்கின்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்துதல் பேரில் அக்கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், தமிழ் அமைப்புகள் இணைய வழியாகவும், அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அவரது இல்லத்திலுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பதாகையேந்தி, சமூக இடைவெளி கடைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “சில வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற தமிழர்களுக்கு கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்ப்பதில்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பதில்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் பயத்துடன் நாள்களை கடத்தி வருகின்றனர். இதனால் அயல்நாடுகளில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர்.

அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற விமானங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என கேரள மாநில அரசு அறிவித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு விமானங்கள் வேண்டாம் என தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால் அயல்நாடு வாழ் தமிழர்கள் தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர். எனவே அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நெருக்கடி காலத்தில் அவர்களை கட்டணம் இன்றி அழைத்து வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இவைகளை செயல்படுத்த உடனடியாக அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், வெளிநாடு வாழ் தமிழர்களை காக்க தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் இருந்தபடி போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT