ADVERTISEMENT

சுகாதாரத்துறையில் பணி நியமன ஊழல்! -சிக்கும் பதிவாளர்! - Exclusive

05:10 PM Jun 04, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


‘ஆயுஷ்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவர்கள் ஒரிஜினலா? போலியா? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கவுன்சிலிலேயே போலியான பணிநியமனங்கள் நடந்திருக்கிறது. இப்படியிருந்தால், போலிச்சான்றிதழ்களை ஏன் இவர்களே அச்சடித்துக் கொடுத்து போலி டாக்டர்களை உருவாக்கமாட்டார்கள்?” என்று கேள்விகேட்டு ஷாக் கொடுக்கிறார்கள் நக்கீரனை தொடர்புகொண்ட மருத்துவர்கள். மேலும், விசாரணையில் இறங்கியபோதுதான் பதிவாளர் இராஜசேகரனின் தில்லுமுல்லுகள் அம்பலமாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இராஜசேகரன்

ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவங்களை படித்தவர்கள் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவுசெய்தால்தான் மருத்துவர்களாக சிகிச்சை பணிகளை செய்யமுடியும். அதேபோல், சித்தமருத்துவம் படித்தவர்கள் சித்தமருத்துவ மன்றத்திலும் ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் ஹோமியோபதி கவுன்சிலிலும் பதிவு செய்யவேண்டும். ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலுக்கு மட்டுமே தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் உள்ளார். மற்ற, இரண்டு கவுன்சிலுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படாததால் தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இந்த, மூன்று கவுன்சில்களுக்குமே தமிழக சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற கு.இராஜசேகரன் என்பவர்தான் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த, கவுன்சில் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள்தான் எந்தவிதமான தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தேர்வுகளும் வைக்கப்படாமல் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதில் பெரும்பாலானாவர்கள் பதிவாளர் இராஜசேகரனின் உறவினர்கள் என்றும் பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய கவுன்சில் ஊழியர் ஒருவரோ, “தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இம்மூன்று கவுன்சில்களும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. இதில், சித்த மருத்துவ மன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவாளர் இராஜசேகரனுக்குக்கீழ் உதவியாளர் (ம்ஹூம்… நிழல் பதிவாளர்)ஜெயக்குமார், இளநிலை உதவியாளர் நிர்மல்குமார், தட்டச்சர் மோகனாம்பாள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பாலாராஜ், அலுவலக உதவியாளர் எசக்கியேல், துப்புரவு பணியாளர் இந்திராணி ஆகியோரும் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலில் கவிதா, பாபு, ஜோசுவா என்கிற வாசுதேவன், கோமதி, வில்லியம், டேவிட் ஆகியோர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஜெயக்குமார்

சித்த மருத்துவமன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக்கவுன்சிலுக்கு அரசாணைப்படி தற்காலிக பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். இதைப்பயன்படுத்திக்கொண்ட பதிவாளர் இராஜசேகரன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இரண்டுமாதம் மூன்றுமாதம் என தற்காலிகப்பணிகளை வழங்கி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குமேலாக பணியமர்த்திவைத்திருக்கிறார். பதிவாளர் இராஜசேகரனுக்கு கீழ் உதவியாளராக இருக்கும் தற்காலிக பணியாளர் ஜெயக்குமார்தான் ‘நிழல்’ பதிவாளர்.

இத்துறையில், நடக்கும் முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் குறித்து யாராவது புகார் கொடுக்கவந்தாலோ, நியாயம் கேட்கவந்தாலோ அவர்களை மிரட்டி;விரட்டியடிக்க ஜெயக்குமாரைத்தான் ‘பாடிகாட்’ ஆக பயன்படுத்திவருகிறார் பதிவாளர் இராஜசேகரன்” என்றவர், நிழல் பதிவாளர் ஜெயக்குமாரின் பணிநியமன பின்னணியையும் விளக்குகிறார், “ஓலைச்சுவடி பிரிவில் பணியாற்றிய போஸ் என்பவரின் உறவினரான ஜெயக்குமார் அவரது சிபாரிசில் ஆஃபிஸ் அசிஸ்டெண்டாக சேர்ந்து கடந்த பத்து வருடங்களுக்குமேலாக தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழகத்தின் உதவியாளராக இருக்கிறார்.

’’2009-ல் திருக்குமார் என்ற உதவியாளர் அரசின் ரப்பர் ஸ்டாம்புகளை வீட்டிற்கே எடுத்துச்சென்று போலிச்சான்றிதழ்களை அச்சடித்து வினியோகித்தார் என்று பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. அப்போது, அவருக்கு துணையாக செயல்பட்டவர் ஜெயக்குமார்தான். ஆனால், போலிச்சான்றிதழ் விவகாரம் வெடிக்க ஆரம்பித்ததும் உதவியாளர் திருக்குமார் தற்கொலை செய்துகொண்டார். அப்போதைய, பதிவாளர் சாய்பிரசாத் கட்டாய விடுப்பில் சென்றுவிட்டார். அதனால், அப்போதே சிக்கவேண்டிய ஜெயக்குமர் தப்பித்துவிட்டார். திருக்குமாரின் மறைவால் போலிச்சான்றிதழ் விவகாரமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. அந்த போலிச்சான்றிதழ்கள் மட்டுமல்ல, இப்போதும் புதிய போலிச்சான்றிதழ்கள் உலாவிக்கொண்டிருக்கிறன. அதிலும், ஜெயக்குமாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று விசாரிக்கப்படவேண்டும். போலி டாக்டர்கள் குறித்து புகார் கொடுத்தால் அந்த தகவல் ஜெயக்குமார் மூலம் போலி டாக்டர்களுக்கு சென்றுவிடும். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகள் அனுப்பினால்கூட போலி டாக்டர்களை காப்பாற்றும் விதமாக பதில் கொடுப்பவரும் ஜெயக்குமார்தான்.

வருகின்ற கடிதங்களை பெறுவது… கடிதங்களை அனுப்புவதுதான் இவரது வேலை என்றாலும் பதிவுசெய்ய வரும் ‘ஆயுஷ்’ மருத்துவர்களோ அல்லது புகார் கொடுக்கவருகிறவர்களோ யாராக இருந்தாலும் ஜெயக்குமார் மனதுவைக்காமல் பதிவாளர் இராஜசேகரனை சந்திக்கவே முடியாது. எந்த புகாராக இருந்தாலும் பதிவாளர் உள்ளே இருந்தாலும்கூட ‘அவரை சந்திக்கமுடியாது… எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்’ என்று அனைவரையும் மிரட்டல் தொனியில்தான் பேசுவார். யார் வந்தாலும் மதிக்கமாட்டார். பதிவு செய்யவரும் டாக்டர்களைக்கூட மிரட்டுவார். பல வருடங்களுக்குமேலாக அதே இடத்தில் பணிபுரிவதாலும் போலி மருத்துவவர்கள் மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் செல்வாக்காலும் அங்கு வரும் பதிவாளர்களே ஜெயக்குமாரை பார்த்து அச்சப்படுகிறார்கள். அதேபோல், போலி டாக்டர்கள் மீது புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ‘எச்சரித்து அனுப்புகிறேன்’ என்று பதிவாளர் தொனியில் ஜெயக்குமார் சொல்வார். இவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என்றும் இவரைப்பிடித்து, விசாரித்தாலே தமிழகத்திலுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போலி மருத்துவர்கள் யார் யார்? போலிச்சான்றிதழ்களை அச்சடிப்பது யார் யார்? என்ற ஏ டூ செட் உண்மைகளும் வெளிவந்துவிடும்.

ஆனால், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுத்தால் ஜெயக்குமார் மூலம் தனது உறவினர்களின் பணி நியமனங்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதால் பதிவாளர் இராஜசேகரன் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தன்னுடைய பணிநியமன தில்லுமுல்லுகள் எல்லாம் தெரிந்த ஜெயக்குமாரை சரிகட்டுவதற்காக ஜெயக்குமாரின் தம்பி பாபுவுக்கும் சுமார் 33,000 ரூபாய் சம்பளத்தில் ஹோமியோபதி கவுன்சிலில் பணிவழங்கியிருக்கிறார் பதிவாளர் இராஜசேகரன். மேலும், சித்தமருத்துவமன்றம் மற்றும் இந்திய மருத்துவக்கவுன்சில் இரண்டிலும் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் எந்த தகுதி, திறமை, தேர்வும் வைத்தும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுகுறித்து, ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டாலும் கொடுக்காமல் மறைத்துவருகிறார் பதிவாளர் இராஜசேகரன்.

ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலுக்கு அதன் விதிப்படி டி.என்.பி.எஸ்.சி. மூலமோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோதான் தகுதி, திறமை, தேர்வு அடிப்படையில் நியமிக்கவேண்டும். அப்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஹோமியோபதி கவுன்சிலில் பணிநியமனம் செய்யப்பட்டவர்தான் உதவியாளர் கவிதா. ஆனால், இங்கு நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து கவிதா வாய்திறக்கக்கூடாது என்பதற்காக கவிதாவின் தங்கை மோகனாவுக்கு சித்தமருத்துவ மன்றத்தில் பணி வழங்கிவிட்டார் இராஜசேகரன். கைலாசம் என்பவர் இத்துறையில் பணியின்போது இறந்துபோனதால் கருணை அடிப்படையில் அவரது மகளுக்கு துப்புறவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. ஆனால், இவரையும் சரிகட்ட முறைகேடாக ரெக்கார்டு க்ளார்க்காக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஜோசுவா என்கிற வாசுதேவன், வில்லியம், தம்பி மகன் டேவிட், நிர்மல்குமார், பாலாராஜ் உள்ளிட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பதிவாளர் இராஜசேகரனுக்கு வேண்டப்பட்டவர்களே. அதுவும், இசக்கியேல் என்பவர் இவரது பர்சனல் கார் டிரைவர். ஆனால், இவருக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக சித்தமருத்துவமன்றத்தில் பியூன் என்ற பணியை வழங்கி அரசு சம்பளத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

மதபோதகர் போல எப்போதும் கையில் பைபிளை வைத்துக்கொண்டு நேர்மையானவர்போல் காட்டிக்கொள்ளும் பதிவாளர் இராஜசேகரன் 67 வயதாகியும் மூன்று கவுன்சில்களுக்கும் பதிவாளராக இருந்துகொண்டு மூன்று சம்பளம் என 1 லட்சத்திற்குமேல் வாங்குவதோடு ஓய்வூதியமும் பெற்றுவருகிறார். இன்னும் சொல்லப்போனால், ஹோமியோபதி கவுன்சிலில் பதிவாளரின் வயது 62 தான் இருக்கவேண்டும். ஆனாலும், தற்போது சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராக உள்ள அன்பு போன்ற அதிகாரிகள் இவருக்குக்குகீழ் பணிபுரிந்தவர்கள் என்பதால் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இவரே மூன்று பதவிகளையும் அனுபவிப்பதோடு பணிநியமனத்திலும் மாபெரும் மோசடியை செய்திருக்கிறார். இவரது, தில்லுமுல்லுகள் குறித்து ஆர்.டி.ஐ.யில் மறைக்கிறார் என்று மேல்முறையீடு செய்தால் ஹோமியோபதி மருத்துவக்கவுன்சிலின் தலைவரும் மேல்முறையீட்டு அலுவலருமான ஞானசம்பந்தத்திடம் கடிதத்தை காண்பிக்காமலேயே இவரே மேல்முறையீட்டு அலுவலராக சட்டத்துக்குப்புறம்பாக பதில் அனுப்புவார்” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிறவர்கள், “நேர்மையானவர்போல் காண்பித்துக்கொண்டு பணி நியமன ஊழல் செய்த பதிவாளர் இராஜசேகரன் மற்றும் முறைகேடாக பணியில் உள்ள அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் சட்டரீதியாக தண்டிக்கப்படவேண்டும்” என்கிறார்கள் கோரிக்கையாக.

இதுகுறித்து, பணிநியமன ஊழல் குற்றஞ்ச்சாட்டப்பட்ட பதிவாளர் இராஜசேகரனை தொடர்புகொண்டு நாம் விளக்கம் கேட்டபோது, “வேலைவாய்ப்பு குறித்து பேப்பரில் எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை. எனது உறவினர்கள் பணியமர்த்தப்பட்டது உண்மைதான். அது, தவறுதான். டெம்பரவரியாகத்தான் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். இங்கேயே இருப்பதால் அப்படியே ரெகுலேட் பண்ணியாச்சு. அவர்கள், தகுதி-திறமை அடிப்படையில்தான் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஹோமியோபதி கவுன்சிலில் தலைவர் இருந்தாலும் அவர் மேல்முறையீட்டு அலுவலர் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்படாததால் மறுபடியும் மேல்முறையீட்டு ஆர்.டி.ஐ. தகவலில் நானே பதில் அளித்தேன்” என்கிறார் கேஷுவலாக. இப்படி, முறைகேடாக பணியமர்த்தபப்ட்டவர்களின் கல்வித்தகுதி என்ன? என்பது குறித்து ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி கேட்டதற்கும் பதில் அளிக்கவில்லை. ஊடகத்தின் மூலம் நாம் விளக்கம் கேட்டதற்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார்.

டாக்டர் கமலஹாசன்

தேசிய ஒருங்கிணைந்த மருத்துவச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் இந்திய ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் டாக்டர் கமலஹாசன் நம்மிடம், “தேர்தலே நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நாடு இந்திய மருத்துவக்கழக்கம், சித்தமருத்துவ மன்றத்திற்கும் தேர்தல் வைத்து தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். டாக்டர்கள் கவுன்சில்களின் தலைவர்களாக உறுப்பினர்களாக வந்துவிட்டால் உள்ளே நடக்கும் நடக்கும் ஊழல்கள் தானாக வெளிவரும். தவறுகள் தடுக்கப்படும்” என்கிறார் கோரிக்கையாக.

சுகாதாரத்துறையில் நடக்கும் பணிநியமன ஊழல் குறித்து சுகாதரத்துறை செயலாளர் தலையிட்டு ‘களை’ எடுக்கவில்லை என்றால் போலி டாக்டர்களை உருவாக்கி மக்களின் உயிருக்கு ‘உலை’ வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT