ADVERTISEMENT

''இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர் தியாகம் செய்தாவது எட்டுவழிச்சாலையை தடுத்து நிறுத்துவோம்!'' - சேலம் நினைவேந்தல் கூட்டத்தில் உறுதிமொழி!!

10:01 AM Jul 29, 2019 | santhoshb@nakk…

இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தாவது எட்டுவழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்தியே தீருவோம் என்று சேலத்தில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். சேலம் முதல் சென்னை வரை பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT



இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதலே விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஏனெனில், எட்டுவழிச்சாலையில் 90 விழுக்காடு ஏழை விவசாயிகளின் விளைநிலங்களின் ஊடாக செல்கிறது. காவல்துறையின் அடக்குமுறையோடு, விவசாயிகளை அச்சுறுத்தி அவர்களின் நிலத்தை கையகப்படுத்தும் வேலைகளை எடப்பாடி பழனிசாமி அரசு செய்தது. இதனால் ஏற்பட்ட விரக்தி, இயலாமை, மன உளைச்சல் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் சேகர், மாரிமுத்து, மாரியப்பன், கங்கையம்மாள், நாச்சியா, ராஜம்மாள், பெத்தம்மாள் ஆகிய ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சிலர் விஷம் குடித்தும், சிலர் மன உளைச்சல் காரணமாகவும் இறந்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி, பூலாவரி புஞ்சைக்காடு ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28, 2019) நடந்தது. புஞ்சைக்காடு பகுதியில் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விவசாயி மோகனசுந்தரம் தலைமையில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, இறந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்களைத் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.



இதுகுறித்து விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத்திட்டம் வேண்டாம் என்று போராடி, இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுபற்றி தமிழக முதல்வரிடம் கேட்டால், அவர் எங்களிடம் எட்டுவழிச்சாலை வராது என்று கூறுகிறார். ஆனால், வேறு இடங்களில் பேசும்போது, எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று பேசுகிறார். இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி 99 சதவீத விவசாயிகள் போராடி வருகின்றனர். ஒரு சதவீத விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகள் அனைவருமே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்.


சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வேண்டும் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். விவசாய நிலங்களை விடுத்து மாற்றுப்பாதைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அல்லது, இப்போதுள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்வதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் வேண்டுமானாலும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்,'' என்றார். அதேபோல், குள்ளம்பட்டியில் விவசாயி பன்னீர்செல்வம் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் அவர்கள், உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் பெயர்களை படித்து, அவர்கள் மீது சத்தியம் செய்து, எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


இதுகுறித்து விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவை தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் பேசி வருகிறார். சேலத்தில் இருந்து சென்னைக்கு எதற்கு எட்டுவழிச்சாலை? அப்படி என்ன ஸ்பெஷல் சென்னையில் இருக்கிறது? ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அத்திட்டத்தை முதலில் செயல்படுத்தட்டும். எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடி, மனம் வெம்பி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இன்னும் ஏழாயிரம் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தாவது நாங்கள் இத்திட்டத்தை வர விடாமல் ஓட ஓட விரட்டி அடிப்போம். இது, உயிர்த்தியாகம் செய்துள்ள விவசாயிகள் மீது சபதம் ஏற்று சொல்கிறோம்,'' என்றார். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT