ADVERTISEMENT

மறைமுக தேர்தல் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது அல்ல!- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

05:39 PM Dec 10, 2019 | santhoshb@nakk…

மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை கோரிய திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக, கடந்த நவம்பர் 19- ஆம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநகராட்சிகளில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளில் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது என்பதால், இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என பிறப்பிக்கப்பட்ட அவசரசட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை என்றும், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் அவசர சட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால் அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், தன்னைக் குறிப்பிட்ட பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறுவது சட்டப்படியான உரிமைதானே (statutory rights)தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை (fundamental right) இல்லை என விளக்கமளித்த நீதிபதிகள், நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது எனக் கூறி தொல். திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT