ADVERTISEMENT

பா.ஜ.க. தனித்துப் போட்டி!  அதிமுக கூட்டணியில் வெடிக்கும் கலகக் குரல்!

02:07 PM Dec 15, 2019 | santhoshb@nakk…

அதிமுகவுடன் கூட்டணி வைத்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் பாஜகவினர், அதிமுக மா.செ.க்களின் கெடுபிடிகளால் ஏகத்துக்கும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இதனால் அதிமுகவை எதிர்த்து தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்துகிறது எடப்பாடி அரசு. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களமிறங்குவதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

ADVERTISEMENT


வேட்பாளர்கள் தேர்வும் வேட்புமனு தாக்கலும் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு இடங்கள் ஒதுக்குவதில் கடுமையாக கெடுபிடி காட்டுவதால் அதிமுக செயலாளர்கள் மீது ஏகத்துக்கும் கடுப்பாகி வருகிறார்கள் பாஜகவின் மாவட்ட தலைவர்கள். இதனால், கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட ஆலோசனை நடத்துகின்றனர். தனித்துப் போட்டியிடுவதற்கான பிள்ளையார் சுழியை போட்டிருக்கிறது புதுக்கோட்டை மாவட்ட பாஜக.

இது குறித்து மாவட்ட பாஜக தலைவர் சேதுபதியிடம் நாம் பேசிய போது, "புதுக்கோட்டையில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. இதில் 225 ஒன்றிய கவுன்சிலும், 22 மாவட்ட கவுன்சில்களும் உள்ளன. இவைகளில் கட்சியும், கட்சி சின்னமும் போட்டியிட முடியும். பிரதமர் மோடியின் சாதனைகளை மாவட்ட முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமாயின் அதிக இடங்களில் பாஜகவினர் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் அனைவரும் என்னிடம் வலியுறுத்தினர். அதன்படி, 13 ஒன்றியங்களில் தலா 3 கவுன்சில் இடம் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டோம். ஆனால், அவர்களோ ஒரே ஒரு இடம்தான் ஒதுக்குவோம் என பிடிவாதம் காட்டினார்கள். நாங்கள் எவ்வளவோ விவாதித்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


ஒதுக்குவதாக சொல்லக்கூடிய அந்த ஒரு இடத்தைக் கூட, பாஜக கேட்கும் இடத்தை தர மாட்டார்களாம். அவர்கள் ஒதுக்கும் இடத்தைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என அழுத்தமாக சொல்கிறார்கள். இது என்ன நியாயம் என தெரியவில்லை. நாங்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி வேண்டுகோள் வைத்தோம் அவர்கள் தர மறுக்கிறார்கள். மாவட்ட கவுன்சில்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகள் விசயத்திலும் இதே அணுகுமுறையும் பிடிவாதமும் செய்து கெடுபிடி காட்டுகிறார்கள் அதிமுக மாவட்ட கழகத்தினர். அதனால், அவர்கள் விருப்பத்துக்கு கொடுக்கும் ஒரு இடத்தில் போட்டியிடுவதைவிட அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடலாம் என மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள்.


அதனால், தனித்துப் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கட்சி மேலிடத்துக்குத் தகவல் தந்திருக்கிறோம்" என்கிறார் மிக அழுத்தமாக. பாஜகவின் தனித்துப் போட்டி என்கிற முடிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்த துவங்கியிருக்கிறது. புதுக்கோட்டையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் இட ஒதுக்கீட்டில் அதிர்ப்தி அதிகரித்திருப்பதால் தனித்துப் போட்டி என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. மனுத்தாக்கலுக்கு நாளை (16-ந்தேதி) கடைசி நாள் என்பதால் பாஜகவின் அதிர்ப்தியை சமாளித்து அக்கட்சியினரை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள கடைசி நேர முயற்சிகளை எடுத்து வருகின்றனர் அதிமுக மாவட்ட செயலாளர்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT