ADVERTISEMENT

அரசுப்பள்ளி மாணவர்கள் 4560 பேர் வெளிமாநிங்களுக்கு களப்பயணம்!

07:10 AM Oct 08, 2019 | santhoshb@nakk…

அரசுப்பள்ளிகளில் பயிலும் 4560 மாணவ, மாணவிகளை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச்செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டின்போதும் மாணவ, மாணவிகளுக்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், கல்வி சார்ந்த மையங்களுக்கு நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக பள்ளிக்கல்வித்துறையும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச் சென்று வருகிறது.

ADVERTISEMENT


அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் நடப்பு 2019&2010 கல்வி ஆண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நேரடி களப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஒரு கல்வி மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 3600 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மாணவர் ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வெளிமாநில நிறுவனங்களை பார்வையிடும் நிகழ்வை, மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து, நடப்பு மாதம் முதல் பிப்ரவரி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


இதேபோல் தொடக்கக்கல்வியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 960 பேரும் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர். அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கும் களப்பயணம் செல்கின்றனர். கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கும், அரியலூர், கடலூர் உள்பட இதர 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியுள்ளதாவது: உடல்நலம் குன்றிய மாணவ, மாணவிகளை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லக்கூடாது. தெரிவு செய்யப்படும் மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் இருந்து கண்டிப்பாக ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.


எந்தெந்த இடங்களுக்கு களப்பயணம் செல்கின்றனர் என்ற விவரங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். களப்பயணம் முடிந்த பிறகு, மாணவர்களிடம் இருந்து அதன் அனுபவப்பகிர்வு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும். இருபது மாணவர்களுக்கு ஒரு கணித அல்லது அறிவியல் ஆசிரியர் வீதம் உடன் செல்ல வேண்டும். மாணவிகளும் பயணக்குழுவில் உள்ளதால் கண்டிப்பாக பெண் ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும்.


இரவு நேரத்தில் தங்கும்போது அனைத்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பையும் உடன் செல்லும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். களப்பயணத்தின்போது மாணவர்கள் தனியாக எங்கும் செல்லவோ, தேவையின்றி வாகனத்தில் இருந்து இறங்கவோ அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பள்ளி சீருடையில்தான் இருக்க வேண்டும். அடையாள அட்டை, மூன்று நாள்களுக்குத் தேவையான சீருடைகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் தேவையான மருந்து பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும். விலை உயர்ந்த பொருள்கள், ஆபரணங்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT