ADVERTISEMENT

"மாநில உரிமைகளைப் பறிப்பதே மத்திய அரசுக்கு வேலையாகப் போய்விட்டது"- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேசம்! 

10:13 PM Dec 10, 2019 | santhoshb@nakk…

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு அதாவது வரும் 2030- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பர் 10- ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி உரையாற்றினார்.

ADVERTISEMENT


அவரது உரை இதோ..."இந்த சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அரசு கொண்டு வரும் மசோதாக்களில் துரதிஷ்டவசமாக இந்த மசோதா மட்டுமே ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த மசோதாவின் மீது சில சந்தேகங்களும் உள்ளன. ஆங்கிலோ இந்தியன் சமூகத்துக்கான இட ஒதுக்கீடு இந்த மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது உரையின் போது தெரிவித்தார்.

ADVERTISEMENT


ஆங்கிலோ இந்தியன் சமூகம் இந்த நாட்டுக்காக பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50,000 ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினர் வாழ்கிறார்கள். நாடு முழுவதும் அவர்கள் சுமார் மூன்று லட்சம் எண்ணிக்கைக்கு மேல் இருக்கக் கூடும். இன்னும் சொல்லப்போனால் 13 மாநிலங்களில் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக தென்னிந்தியா மாநிலங்களில் 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளனர்.


இந்தியா முழுவதும் அவர்கள் சிதறி இருப்பதால் அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிப்பது பற்றி ஏன் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை? இந்த மசோதாவைப் பற்றி மாநில அரசுகளிடம் ஏதாவது விவாதித்தீர்களா? மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சியில் தலையிடுவது மத்திய அரசுக்கு வேலையாக போய்விட்டது.


ஒவ்வொரு மசோதாவிலும் இதுவே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரே காரணத்தாலேயே சிறுபான்மையின மக்களை தொடர்ந்து துன்புறுத்த வேண்டும் என அர்த்தம் கிடையாது. நேற்று (09.12.2019) குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது. இன்று கொண்டுவரும் இந்த மசோதா கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றார் கனிமொழி.

தொடர்ந்து அவர் பேசுகையில்,"எஸ்சி எஸ்டி யினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்கப் படுவதை முழுமனதோடு வரவேற்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் ஆண்களும் பெண்களும் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். அந்த சமத்துவத்தை சாதித்துக் காட்டியவர். 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது.
அதேநேரம் சமூக அளவில் இன்னமும் பல தீண்டாமைச் சுவர்கள் நாட்டில் இருக்கின்றன.

சுடுகாட்டை கூட தலித் மக்களோடு பகிர்ந்து கொள்ள தடை இருக்கிறது. தலித் மக்களின் சாம்பல் கூட தங்கள் சாம்பலுடன் கலந்து விடக்கூடாது என்ற தீண்டாமை இருக்கிறது. தலித்துகளுடன் தண்ணீரை பங்கு போட்டுக்கொள்ள தடை இருக்கிறது. குளங்களில், கிணறுகளில் தலித்துகள் இறங்க முடியாத நிலை இன்னும் இருக்கிறது. தலித்துகள் மற்றவர்களோடு சேர்ந்து வாழ முடியாத நிலைமை இன்னமும் இருக்கிறது. தலித்துகள் தெருவில் நடக்க முடியாத நிலைமை கூட இன்னமும் இருப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.இன்னமும் எத்தனை எத்தனை தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.


அவர்களைப்பற்றி நாம் குரல் எழுப்புகிறோமா? அவர்களைப் பற்றி நாம் விவாதிக்கிறோமா? இன்னும் சொல்லப்போனால் நகரங்களில் நடக்கும் ஒரு சில விஷயங்களைத்தான் ஊடகங்கள் செய்தி ஆக்குகின்றன. நாடாளுமன்றத்தில் 15% எஸ்சி உறுப்பினர்களும் 8.6 சதவீதம் எஸ்டி உறுப்பினர்களும் இருப்பதாக இங்கு பேசிய சிலர் பெருமை பட்டார்கள். இந்த இட ஒதுக்கீடு அளவு 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியானது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது அதிகமாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நான் அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.


ஏனெனில் அதுபற்றி எந்த ஒரு நகர்வும் நடக்கவில்லை. பெண்கள் எந்த சமூகத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் தலித்துகளாகவே கருதப்படுகிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் 90% பேர் பணியாற்றும் 10 முக்கியமான துறைகளில் எஸ்சியினருக்கான 8223 பணியிடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன. அதேபோல எஸ்டி- யினருக்கான 6925 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய அரசு இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் இருக்க விரும்பும் காரணம் என்ன? இந்த விவரத்தை மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்ற அவையிலேயே தெரிவித்துள்ளார்.


இந்த அவைக்கு சமூக சமத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு இன்றைக்கும் ஒரு முன் மாதிரியாக இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது சமத்துவபுரம் என்ற அமைப்பு அனைத்து கிராமங்களிலும் நிறுவப்பட்டது. இந்த சமூகத்தில் இருக்கும் உயர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைத்து சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் இணைந்து வாழும் சமத்துவ தொகுப்புகளாக சமத்துவபுரம் அமைத்தார் கலைஞர்.


சாதி முறையை அகற்றி சமத்துவ முறையை முன்னெடுக்கும் திட்டமாக சமத்துவபுரம் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன். எஎஸ்சி எஸ்டி பிரிவினரின் முன்னேற்றத்தில் கல்வித்துறை ஒரு பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் எஸ்சி, எஸ்டி. மாணவர்களின் ஸ்காலர்ஷிப் தொகை பெருமளவுக்கு இன்னமும் அவர்களுக்கு சென்று சேராத நிலை இருக்கிறது. இதனால் நிர்வாகக் கோட்டாவில் சேரும் பல தலித் மாணவர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த எஸ்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 384 கோடி ரூபாய் உதவித் தொகையை இன்னமும் வழங்காமல் வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட அணுகுமுறைகளால் எப்படி எஸ்சி, எஸ்டி சமுதாயத்தை முன்னேற்ற முடியும்? நாட்டிலுள்ள 13 ஐஐஎம் உயர்கல்வி நிறுவனங்களில் பெங்களூரு ஐஐஎம் நடத்திய ஒரு சர்வேயின்படி மொத்தமுள்ள 642 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி பிரிவினர் 4 பேர்தான், எஸ்டி பிரிவில் ஒரே ஒருவர் மட்டும்தான். சென்னை ஐஐடியிலும் இதே நிலைதான்.


கடந்த பத்து ஆண்டுகளில் 3 ஆயிரத்து 848 முனைவர் இருக்கைக்கான சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருடையது 234 மட்டும்தான். இதுதான் அறிவுத் தீண்டாமையா? ரோஹித் வெமுலா என்ற மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்,,‘சமத்துவம் நிராகரிக்கப்படும் போது எல்லாமே நிராகரிக்கப்படுகிறது’என்று கூறினார். எனவே இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதன் மூலம் மட்டுமல்ல, பல்வேறு வகைகளிலும் எஸ்சி, எஸ்டி சமுதாயத்தினரை முன்னேற்ற மத்திய அரசு முன் வரவேண்டும். எஸ்சி, எஸ்டி மக்களுக்கான சுயமரியாதையும், சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்”என்று பேசினார் கனிமொழி எம்.பி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT