ADVERTISEMENT

உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி சட்டமன்ற செயலாளர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

07:54 AM Sep 29, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி, சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017- ஆம் ஆண்டு, சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக்கூறி, ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கங்களைப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், கடந்த 7- ஆம் தேதி மீண்டும் கூடிய உரிமைக்குழு, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக்கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க உயர்நீதிமன்றம், உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது. இந்த வழக்கை தனி நீதிபதி விசாரணைக்கு ஏற்றிருக்கக்கூடாது. மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமைக்குழு நோட்டீஸில் தலையிட எந்த காரணமும் இல்லை. உரிமைக்குழு, சட்டமன்றத்தின் ஒரு அங்கம் என்பதால், உரிமைக்குழு நடைமுறைகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது. சட்டமன்றத்துக்குள் நடைபெறும் உரிமைக்குழு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. நோட்டீஸ் மீது எந்த முடிவும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT