ADVERTISEMENT

‘தமிழகம்; தமிழ்நாடு’ - வலுத்த எதிர்ப்பு; விளக்கம் அளித்த ஆளுநர்!

12:30 PM Jan 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் கடந்த 4ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.

முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT