ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

11:22 AM Apr 09, 2024 | prabukumar@nak…

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

ADVERTISEMENT

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT