Skip to main content

தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
19 Tamil Nadu fishermen issue

தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 400 படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்து விட்டு கரை திரும்பிக்  கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 19 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைதான மீனவர்கள் 19 பேரும் விசாரணைக்காக காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து மீனவர்கள் 19 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.