ADVERTISEMENT

“புகை மாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும்” - அமைச்சர் மெய்யநாதன் 

11:20 AM Dec 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு, பரதம், நடனம், கலை, இலக்கியம், பாட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லாத தண்ணீர் பாட்டில்கள் எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, இந்தப் பள்ளியின் மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்து நடக்க உள்ள மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்குட்பட்டோர்களுக்கான கையுந்து பந்து, பீச் வாலிபால் போட்டிகளில் பங்கேற்கச் செல்கின்றனர்.

இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவை உள்ளதையறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளிக்கு நேரில் சென்று மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ள 27 மாணவிகளுக்கு விளையாட்டு உடை மற்றும் உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் மாணவிகள் மத்தியில் பேசும்போது, “நமக்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதும் என்பதை கடந்து இந்தப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து விளையாட்டு, கலை போட்டிகளிலும் தனித்திறன்களை வெளிப்படுத்தி சாதித்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக எந்த ஒரு இடத்திலும் இங்கே பிளாஸ்டிக்கை காண முடியவில்லை. தண்ணீர் பாட்டில்கள் கூட பிளாஸ்டிக்கில் இல்லை என்பது சிறப்பாக உள்ளது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த காலங்களைவிட பல மடங்கு புகை மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டுள்ளது. இதேபோல தொடரும் பட்சத்தில் புகைமாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். அதுவும் மாணவர்களான உங்களால்தான் சாத்தியமாகும்.

நீங்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும்போது நீங்கள் உங்கள் வீட்டிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க செய்வீர்கள். உங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் தவிர்க்கப்படும்போது உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளிலும் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்கள். அதனால்தான் மாணவர்களில் இருந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு, புகைமாசு ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடங்குகிறோம். அதன் ஒரு பகுதிதான் தீபாவளியில் புகை மாசு குறைந்தது என்ற பலன். வரும் காலங்களில் சுற்றுச்சுழலை பாதுகாக்க மாணவர்களாகிய நீங்கள் சபதம் ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்கால சந்ததி நலமுடன் வாழ முடியும். விளையாட்டோடு சேர்ந்த படிப்பு தான் உயர் கல்வியையும் உடல் ஆரோக்கியத்துடன் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தரும். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்போடு விளையாட்டும் சேரும்போது அதற்கான சிறிய மதிப்பெண்கள் கூட இட ஒதுக்கீட்டில் கல்வியையும் வேலையையும் பெற்றுத் தருகிறது.

விளையாட்டில் சாதிக்கும் வீராங்கனையாக வருகிறீர்கள். அதேபோல உங்கள் கவனம் விளையாட்டின் பக்கம் திசைமாறும்போது தீய எண்ணங்களின் பக்கம் உங்கள் சிந்தனை போகாது. அதனால் தீய பழக்கவழக்கங்கள் மறைந்து போகும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் குற்றச் செயல்களும் குறைந்துவிடும். ஆகவேதான் விளையாட்டுடனான படிப்பு தேவை என்கிறோம். உங்களுக்கான தேவைகளை அறிந்து இந்த அரசு உங்களை ஊக்கப்படுத்தவும் உதவிகள் செய்யவும் தயாராக உள்ளது” என்றார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கொடியரசன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT