ADVERTISEMENT

'கொலீஜியத்தின் முடிவை தஹில் ரமானி மதிக்க வேண்டும்'- இந்திய பார் கவுன்சில்!

06:27 PM Sep 11, 2019 | santhoshb@nakk…

கொலீஜியத்தின் முடிவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. அதேபோல் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக கொலீஜியம் நியமித்து பரிந்துரை செய்தது. இடமாற்றம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய கொலீஜியத்திற்கு தஹில் ரமானி கடிதம் அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அந்த கோரிக்கையை கொலீஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசுத்தலைவருக்கும் தஹில் ரமானி ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் கொலீஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில்ரமானி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது. மேலும் தலைமை நீதிபதி ராஜினாமா கடிதம் அளித்தது கொலீஜியத்தின் முடிவை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளது. நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்துக்கும், குஜராத் பில்கிஸ் வழக்குக்கும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தகவல் தவறு என்றும் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாறுதல் செய்த போது ஏற்றுக்கொண்டதைப் போல் மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் என்றும் இந்திய பார் கவுன்சில் தஹில் ரமானியை கேட்டுக் கொண்டுள்ளது.



நீதிபதிகள் தஹில் ரமானி மற்றும் அஜய்குமார் மிட்டல் இடமாறுதல் குறித்த முடிவுக்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை என்றும் இந்திய பார் கவுன்சில் கூறியுள்ளது. ஒரு பெரிய நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதியை சிறிய நீதிமன்றத்திற்கு மாற்றுவது இதுவே முதல்முறை என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் நீதிபதிக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் இந்திய பார் கவுன்சிலின் அறிவிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT