ADVERTISEMENT

சர்ச்சையை கிளப்பிய சஸ்பென்ட். - போன் எடுக்காதது ஒரு தப்பா?

02:16 PM Jan 06, 2019 | raja@nakkheeran.in

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் பார்த்தசாரதி. நீண்ட மாதங்களாக இந்த நகராட்சியின் ஆணையர் பதவி என்பது காலியாகவே இருந்துவந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் நாமக்கல்லில் இருந்து பார்த்தசாரதி என்பவர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தினமும் காலை 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு தெருவாக சென்று துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்துள்ளார்களா என ஆய்வு செய்ய தொடங்கிவிடுவார். அதேப்போல் தண்ணீர் வராத தெருக்கள் எது, மின்விளக்கு எரியாத தெரு எது என பார்த்துவிட்டு நகராட்சி பணியாளர்களை கொண்டு அந்த பணியை செய்வார். இதனால் பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்துவந்தது. பணியிலும் நேர்மையாக இருந்தார் என்கிறார்கள் இந்நகராட்சியின் அதிகாரிகள்.


இந்நிலையில் தான், மேல்அதிகாரிகளுக்கு மரியாதை தராததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார் என வேலூர் மண்டல நகராட்சி இயக்குநர் விஜயகுமார் அறிவித்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுப்பற்றி நாம் விசாரித்தபோது, கடந்த வாரம் பார்த்தசாரதி, இரண்டு நாள் விடுமுறை கடிதத்தை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். விடுமுறையில் இருந்தபோது விஜயகுமார் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை. இதுதொடர்பாக நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பார்த்தசாரதியை ஒருமையில் திட்டியுள்ளார் விஜயகுமார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டபோது, உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன் என விஜயகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்தே சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள்.


அதோடு, விடுமுறை என்பது ஒரு ஊழியரின் அடிப்படை உரிமை. விடுமுறை கடிதம் அளிக்காமலே விடுமுறை எடுத்துக்கொண்டு பின்னர் கடிதம் தரலாம் என்கிறது விதிமுறை. அவர் மின்னஞ்சலில் விடுமுறை கடிதத்தை அனுப்பிவிட்டே சென்றுள்ளார். விடுமுறை தினத்தின் மேலதிகாரிகள் அழைத்தால் போனை எடுக்கவேண்டும் என்கிற கட்டாயம்மில்லை. போன் ஏன் எடுக்கவில்லை எனக்கேட்டபோது, குடும்ப பிரச்சனை காரணமாக விடுமுறை போட்டுவிட்டு சென்றேன், அங்கு செல்போனை சைலண்ட்டில் போட்டுயிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை என விளக்கம் தந்துள்ளார், அதை ஏற்றுக்கொள்ளாமல் அனைவர் முன்னிலையிலும் ஒருமையில் பேசியது சரியில்லை என்கிறார்கள்.


ஆம்பூர் அரசியல் பிரமுகர் ஒருவர் நம்மிடம், ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அதிமுக பிரமுகர் ஒருவரின் குடும்ப கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அந்த பிரமுகர் மற்றும் அவர் தரப்பின் சில கோரிக்கைகைள ஆணையாளர் கேட்கவில்லை. இதுப்பற்றி அமைச்சர் வீரமணியிடம் அந்த பிரமுகர் முறையிட்டார். ஆணையர் நேர்மையாக எதையும் அணுகுபவர் என்பதால் அதிகாரிகள் வழியாக வந்த சிபாரிசுகளையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. அதற்கு பழிவாங்கவே மேல்அதிகாரிகளை மதிக்கவில்லை எனச்சொல்லி சஸ்பென்ட் செய்துயிருப்பார்கள் என நினைக்கிறோம் என்கிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT