ADVERTISEMENT

குடும்பத் தகராறு; விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ-க்கு சரமாரி கத்திக்குத்து

04:22 PM Feb 09, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளச்சேரியில் காவல் உதவி ஆய்வாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஷாலினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான வீரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அதனால் ஷாலினியின் அண்ணன் சதீஷ் தாஸ் வீரமணியை தொடர்ந்து அவதூறாகப் பேசி வந்திருக்கிறார். இதனால் ஷாலினிக்கும் அண்ணன் சதீஷ் தாஸுக்கும் தொடர்ந்து வாக்குவாதமும் குடும்பத் தகராறும் நடந்து வந்திருக்கிறது.

இந்த சமயத்தில் ஷாலினி கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் இருந்த 2 கிராம் தங்க நகையைக் காணவில்லை என வேளச்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், தான் கொடுத்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என மறுநாளே காவல்நிலையத்திற்கு வந்து எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தாய் சாந்தி, அண்ணன் சதீஷ் தாஸ், மற்றொரு அக்கா வேளாங்கண்ணி ஆகியோர் ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாகத் தக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஷாலினி சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் அன்று இரவே உதவி ஆய்வாளர் அருண், சதீஷ் தாஸின் வீட்டிற்கு விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது விசாரிக்க வந்த உதவி ஆய்வாளர் அருணை சதீஷ் தாஸ் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் தோள்பட்டையில் ரத்தம் வழிய வழிய அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ் தாஸை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அக்கா வேளாங்கண்ணி, தாய் சாந்தி ஆகியோர் தலைமறைவாகி இருப்பதால் போலீசார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT