ADVERTISEMENT

முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும்... குட்டியானையில் ஏறி கல்லூரி போகும் மாணவிகள் குமுறல்!

11:17 PM Oct 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகரப் பேருந்துகள் பெண்கள் பயணக்கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்தார். அதனால் அனைத்து நகரப் பேருந்துகளும் விலையில்லா பேருந்துகளாகிவிட்டது. அதே நேரத்தில் கல்லூரி செல்லும் மாணவிகள், நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்காததால் குட்டியானை எனப்படும் நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனத்தில் ஏறி தினசரி கல்லூரி செல்லும் அவல நிலையும் தமிழகத்தில் தான் நடக்கிறது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலிருந்து திருவோணம் வழியாக ஒரத்தநாடு செல்லும் பிரதானச் சாலையில் பயணித்த போது தான் அந்த ஆபத்தான பயணத்தை நம்மால் காணமுடிந்தது. குட்டி யானை வாகனங்களில் நாற்று கட்டுகளை ஏற்றிச் செல்லும் பல வாகனங்கள் முந்திச் செல்ல அடுத்து நடவுக்குச் செல்லும் பெண்களை ஏற்றிக் கொண்டு சில நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனங்கள் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் துக்க நிகழ்வுக்காக மாலைகளுடன் ஒருநான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனம் சென்றது, அதில் ஆண்களும் பெண்களும் சென்றனர்.

இந்தக் காட்சிகளை பார்த்த சில நிமிடங்களில் ஒரு நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனத்தில் சுமார் 50, 60 மாணவிகள் பேக்குகளுடன் நின்று கொண்டிருக்க வாகனம் நம்மை முந்திச் சென்றது. வேலைக்கும் துக்கத்துக்கும் குட்டியானை வண்டியில போறாங்க; மாணவிகள் ஏன் இப்படி போறாங்க என்ற கேள்வி எழ அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலைக்கல்லூரி முன்பு நின்றது அந்த குட்டியானை வாகனம். அதிலிருந்து மொத்த மாணவிகளும் கீழே இறங்கி நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே வேக வேகமாக கல்லூரிக்குள் ஓடினார்கள்.

அதில் சில மாணவிகளை நிறுத்தி இப்படி சரக்கு வாகனங்களில் பயணிக்க கூடாது. சமீபத்தில் கூட அதாவது அக்டோபர் 7 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகரில் இருந்து பரவாக்கோட்டைக்கு நடவுக்காக ஒரு டாடா ஏசிஇ-ல் போனவர்கள் அந்த வாகனம் கவிந்து அதில் போன 15 பேரும் படுகாயமடைந்தார்கள். சிலர் இன்னும் சிகிச்சை முடிந்து வீடுவந்து சேரல. அதனால படிக்கிற நீங்கள் இது போன்ற சரக்கு வாகனத்தில் பயணிக்கலாம்? போலீஸ் பிடிச்சு அபராதம் விதிப்பாங்க. சம்மந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் கூட செய்வாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. இடை மறித்த சில மாணவிகள்.. அண்ணா நீங்க சொல்று எல்லாம் சரி தான்.

நாங்க செய்றது ஆபத்தான சட்டத்திற்கு புறம்பான பயணம் தான் ஒத்துக்கிறோம். ஆனால் ஏன் இப்படி ஆபத்தான பயணம் செய்றோம்னு தெரியுமா? ஒரத்தநாடு கலைக்கல்லூரியில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தினசரி வந்து போற சுமார் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கிறோம். கரோனா காலத்துக்கு முன்னால எங்க ஊருக்குள்ள டவுன் பஸ் வரும் ஏறி கல்லூரிக்கு வருவோம். ஆனா கரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட பிறகு கிராமங்களுக்குள்ள டவுன் பஸ்கள் சரியா வருவதில்லை. அதிலும் டவுன் பஸ்ல பெண்களுக்கு இலவச பயணம் என்று முதலமைச்சர் அறிவித்த பிறகு சுத்தமாவே டவுன் பஸ் வரல. எங்கள் வசதிக்காக முதல்வர் அறிவிச்ச திட்டத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முடக்கி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துறாங்க.

நேரத்துக்கு கல்லூரி வரனும் அதனால் எல்லா மாணவிகளும் ஆளுக்கு 10, 20 ரூபாய் சேகரித்து தினசரி லோடு ஆட்டோவுல தான் வந்து போறோம். பஸ் விடச் சொல்லி பல முறை போராடியும் பலனில்லை. இது தமிழக முதல்வர் கவனத்துக்கு போனால் தான் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம் என்றனர். இதில் பலரும் முதல் பட்டதாரிகளாக படிக்க வரும் பெண்கள். போக்குவரத்து வசதி இல்லாத இதே நிலை நீடித்தால் பல நூறு மாணவிகளின் பட்டதாரி என்னும் கனவு படிப்பு கனவாகவே போய்விடும். தமிழக அரசு மாணவிகளின் நலன் கருதி கறம்பக்குடிக்கு மற்ற பல கிராமங்களுக்கும் பழைய நகரப் பேருந்துகளை இயக்கினால் நல்லது; கல்லூரி செல்லும் மாணவிகள் பெரும் பயனடைவார்கள்...


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT