ADVERTISEMENT

தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுத்த வேலை; வலுக்கும் கண்டனங்கள்

03:09 PM Dec 12, 2023 | kalaimohan

சென்னை கொரட்டூரில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் மேற்பகுதியில் உள்ள நீர் தொட்டியை ஆபத்தான முறையில் நின்றபடி சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மூன்று பள்ளி மாணவர்கள் பள்ளி கட்டடத்தின் மீது உள்ள குடிநீர் தொட்டியில் இறங்கியபடி அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மேலே ஒரு மாணவர் நின்று கொண்டிருக்க, தொட்டிக்குள் இறங்கிய மாணவர்கள் இருவர் உள்ளே இருக்கும் நீரை வாலியில் எடுத்துக் கொடுக்க வெளியே ஊற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவை பதிவு செய்த நபர் 'ஆபத்தான முறையில் மாணவர்களே சுத்தம் செய்து கொண்டிருக்கிறீர்களே யார் உங்களை சுத்தம் செய்யச் சொன்னா' என கேட்க மாணவன் ஒருவன் ஹெச்.எம் சார்தான் என பதிலளித்தான்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கொரட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான சூழலில் தூய்மைப்படுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மாடியை ஒட்டி அமைந்துள்ள குடிநீர்த் தொட்டியின் மீது ஏறி எந்த பிடிமானமும் இல்லாமல் சில மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் மின்சாரக் கம்பி செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் மாணவர்களை குடிநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுத்தியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்பது ஒருபுறமிருக்க, இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? என்பதை கண்டறிந்து சரி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கட்டிடங்கள் உள்ள நிலையில், அவற்றின் பராமரிப்புக்காக போதிய நிதி அரசால் ஒதுக்கப்படுவதில்லை. அதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களே இந்த பணிகளை செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் மீது இந்தப் பணி திணிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த செலவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இப்போதும் கூட மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.1.9 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதைக் கொண்டு ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக ரூ.2500 மட்டுமே வழங்க முடியும். பள்ளிக்கூடங்களில் சாய்ந்து விழுந்த ஒரு மரத்தை வெட்டி அகற்றவே ரூ.2500 தேவைப்படும் போது, அதே தொகையைக் கொண்டு ஒட்டுமொத்தப் பள்ளிக்கும் பராமரிப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் பராமரிப்புக்காக அரசு கூடுதல் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT