ADVERTISEMENT

கல்லூரி நிர்வாகி பாலியல் தொல்லையால் இருண்ட எதிர்காலம்! -மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடிய மாணவிகள்!

10:39 PM Jun 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் சேர்மனும், முன்னாள் பா.ஜ.க. நிர்வாகியுமான டாஸ்வின் ஜான் கிரேஸ், அவருடைய கல்லூரியில் இரண்டாமாண்டு படித்த மாணவி ஒருவருடன் ஆடைகளற்ற நிலையில் சாட்டிங் செய்த விவகாரம், அந்தக் கல்லூரி மாணவர்களால் வெளிச்சத்துக்கு வந்து, கைதாகி அவர் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், தங்களது எதிர்காலம் குறித்த கவலையில் திரண்ட மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியைச் சந்தித்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடந்த இந்த சந்திப்பின்போது, அந்தக் கல்லூரி சம்பந்தப்பட்ட தகவல்களையும், மாணவர்களின் எண்ணிக்கையும், விடுதியில் தங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் ஆட்சியர் மேகநாதரெட்டி. அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்களது குமுறலைக் கொட்ட, ‘கூல்’ செய்தார் ஆட்சியர்.

கூட்ட அரங்கில் மாணவர்கள் தரப்பு எழுப்பிய கேள்விகளையும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கூறிய பதில்களையும் பார்ப்போம்!

மாணவர்: இந்தக் கல்லூரியில் பாதுகாப்பு என்பதே இல்லை. இனி நாங்கள் வேறு கல்லூரியில்தான் படிக்கவேண்டும்.

ஆட்சியர்: இந்த மாணவரின் கருத்தை அனைத்து BEMS மாணவர்களும் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அனைத்து மாணவர்களும் வேறு கல்லூரியில் படிக்க விரும்புகின்றீர்களா?

மாணவர்கள்: ஆமாம்.

ஆட்சியர்: இந்தக் கல்லூரி எந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறது?

மாணவர்கள்: NEHM (Naturo Electro Homeopathy Medicos of India) நியூ டெல்லி. நாங்கள் வேறு கல்லூரிகளில் சேர்வதற்கு NOC சான்றிதழ் வேண்டும்.

ஆட்சியர்: BEMS படிப்புக்கான பிரிவுகள் உள்ள கல்லூரிகள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் உள்ளன?

மாணவர்கள்: சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற ஊர்களில் உள்ளன.

ஆட்சியர்: நீங்க எல்லாரும் எங்கே படிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுங்க. நான் NEHM-ல் பேசுகிறேன். அதற்குப்பிறகு, முடிவு செய்வோம். கேடரிங் மாணவர்களை பாஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்வார்களாம். அங்கு யாரெல்லாம் சேர விரும்புகிறீர்களோ, சேர்ந்துகொள்ளலாம். நர்சிங் மாணவர்களை, எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியிலோ, வேறு கல்லூரிகள் அடங்கிய லிஸ்ட் கொடுத்தால், அந்தக் கல்லூரிகளிலோ, விபரத்தைச் சொல்லி ஒரு வாரத்திற்குள் உங்களைச் சேர்த்துவிடலாம்.

மாணவி: அருப்புக்கோட்டையில் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் உள்ளனர். அவர்களால் வீடுகளுக்குச் செல்ல முடியாது. விடுதியில் உணவு இல்லை; பாதுகாப்பும் இல்லை. என்ன செய்வது?

ஆட்சியர்: விடுதி மாணவர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்.

மாணவி: வீட்டுக்குச் சென்றால், பெற்றோர் திரும்பவும் படிப்பதற்கு, கல்லூரிக்கு அனுப்புவதற்குத் தயங்குவார்கள். இன்னொரு விஷயம் – மாவட்ட ஆட்சியரான உங்களைச் சந்திப்பதற்கு 15 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தீர்கள். ஆனால், மாணவர்கள் அனைவருமே ஆட்சியரைச் சந்திக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். உங்களைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதாகச் சொன்னவர்களே, எங்களை மீறி யாரும் கல்லூரியைவிட்டு வெளியே போகக்கூடாது என்று பிளாக்-மெயில் செய்தார்கள்.

ஆட்சியர்: உங்களது படிப்பு கெடாமல் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அனைத்தையும் நான் செய்கிறேன். ஆனால், ஒரு 10 நாள் அவகாசம் வேண்டும். ஹாஸ்டல் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் செல்லுங்கள். மாற்று ஏற்பாடுகள் முடிந்ததும் தகவல் அனுப்பப்படும். நான் இன்றைக்கே டெல்லியைத் தொடர்புகொண்டு உங்களது பிரச்சனைகளை விவரிக்கிறேன். நர்சிங் மாணவர்களுக்காக, எம்.ஜி.ஆர். கல்லூரியிலும் போனில் பேசுகிறேன்.

மாணவர்கள்: எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அந்தக் கல்லூரியில் ஹாஸ்டலுக்கான கட்டணம் எல்லாம் செலுத்திவிட்டோம்.

ஆட்சியர்: அப்படியென்றால் அங்கு R.I.யை பணியில் அமர்த்துவோம். ஹாஸ்டலைத் தொடர்ந்து செயல்படுத்துவார்கள். தாசில்தார் தினமும் அந்தக் கல்லூரிக்கு வருவார். ஒரு குழு அமைப்போம். ஒரு பெண் அதிகாரி வி.ஏ.ஓ. வருவாங்க. உங்க எல்லாருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

மாணவி: நாங்கள் அடுத்த கல்லூரியில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மார்க்‌ஷீட் எல்லாம் நீங்களே (ஆட்சியர்) பெற்றுத் தருவீர்களா? அதற்காக, நாங்கள் வேறு யாரையும் நாட வேண்டாமா?

ஆட்சியர்: உங்களுக்குத் தேவையானதை உங்கள் கையில் கொடுத்துத்தான் அனுப்புவோம்.

மாணவி: சார், அதை நீங்களே பெற்றுத் தாருங்கள். எல்லா டாகுமென்ட்ஸையும் பூட்டி வச்சிட்டாங்க.

ஆட்சியர்: சாவி இல்லையென்றால் உடைத்து எடுப்போம். ஆனால் ஒரு விஷயம் – ஒரு சின்ன தண்ணீர் பாட்டில்கூட அந்தக் கல்லூரியிலிருந்து வெளியே போகக்கூடாது. அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். சரியா? எங்களுக்குத் தெரியாமல் எதுவும் வெளியில் போகக்கூடாது. நாங்க சென்ட்ரலில் சொல்லி, என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்கிறோம். என்னுடைய சொந்தக் கருத்து – அந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒரு வாரம் விடுப்பு எடுத்து, மன அமைதி பெற்றபிறகு, வேறு கல்லூரியில் சேரட்டும்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் மாணவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும், திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொறுமையாக விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை, மாணவர் ஒருவர் கேட்ட கேள்வி டென்ஷனாக்கி, கோபத்தில் ஒரு வார்த்தையை உதிர்க்க வைத்தது.

அந்த மாணவர்: சார், அந்த நபரைக் கைது பண்ணிவிட்டார்கள். பிற்காலத்தில் சிறையிலிருந்து வெளியேவந்து, எங்கள் மீது REVENGE எடுத்தால் என்ன செய்வது?

ஆட்சியர்: என்ன REVENGE எடுக்கமுடியும்? ……….. எடுக்கமுடியும்? என்னப்பா ரெவஞ்ச் எடுக்கமுடியும்? அதெல்லாம் எதுவும் முடியாது. அதற்குள் நீங்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிடுவீர்கள்? யோவ், இது என்ன சினிமாவா? ரெவஞ்ச் எடுக்கிறதுக்கு? அவரால் உங்களை ஒன்னும் பண்ண முடியாது. அவர் வெளியில் வந்தாலும், உங்களுக்கு ஒரு பாதிப்பும் வராது. நாங்க பாதுகாப்பு தருகிறோம். ஒருவேளை அந்தமாதிரி பாதிப்பு வந்தால், எங்கள் நம்பருக்கு கால் பண்ணுங்க. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

அருப்புக்கோட்டையை மட்டுமல்ல, தமிழகத்தையே பதற வைத்த பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளிடம் ஆறுதலாகப் பேசியதோடு, விரைந்து தீர்வு காணவும் முனைந்திருக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் செயல் பாராட்டுக்குரியது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT