ADVERTISEMENT

முதல்வரை பள்ளிக்கு அழைத்த மாணவர்கள்... பச்சலூர் ஹைடெக் பள்ளியில் பணிகள் தீவிரம்!

11:46 PM Jun 03, 2022 | kalaimohan

ADVERTISEMENT

'தமிழ்நாட்டில் இப்படி ஒரு அரசுப் பள்ளியா?' என அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஒரு பள்ளி மாணவனுக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமோ அத்தனையும் ஒரே இடத்தில் கற்றுத்தரப்படுகிறது.

ADVERTISEMENT

அழகான, சுத்தமான வகுப்பறைக்குள் நுழைந்தால் 5 நட்சத்திர விடுதி அறைக்குள் நுழைந்தது போல இருக்கும். ஏ.சி, கணினி, ஸ்மார்ட் போர்டு, மாணவர் மனசு, குடிநீர், சீப்பு கண்ணாடி, புத்தக சுமையை குறைக்க அலமாரிகள் என நூற்றுக்கணக்கான வசதிகள். அத்தனை வசதிகளையும் ஏற்படுத்த 70 நாட்களே ஆனது என்கிறார் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி. அத்தனையும் பொதுமக்கள், பெற்றோர்களின் உதவியுடன் அரசின் திட்டங்களையும் நிதியையும் பெற்று செய்யப்பட்டது. அனல் பறக்கும் வெயிலில் நின்று 100 நாள் வேலை செய்யும் பெண்கள் கூட பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள்.

இப்படி ஒரு பள்ளியை மாங்குடியில் உருவாக்க 15 ஆண்டுகள் ஆனது பச்சலூரில் உருவாக்க 70 நாட்களே ஆனது என்பது வியப்பில்லை. இந்தப் பள்ளியைப் பார்க்க பல பள்ளி பெற்றோர்களும் வந்து பார்த்த பிறகு வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் செல்கிறார்கள்.

அப்படி வந்தவர்கள் தான் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு மக்களும். பள்ளியை பார்த்த அடுத்த நாளே, ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு நவீன வகுப்பறை அமைக்க நிதி வழங்கிய அமைச்சர் மெய்யநாதனின் ஊக்கத்தில், பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி ஆலோசனையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் மேற்பார்வையில் தங்கள் பள்ளியையும் நவீனப்படுத்தி வருகின்றனர். இதேபோல புதுக்கோட்டை விடுதி, மினிகந்தா, அழியாநிலை பள்ளிகளும் நவீனமாகி வருகிறது.

இந்தப் பள்ளிகள் பற்றி நக்கீரன் மற்றும் நக்கீரன் இணையத்தில் வீடியோ செய்திகள் வெளியானது. அதில் டெல்லி சென்ற முதல்வர் அய்யா ஒரு பள்ளியை பார்த்து இதுபோல பள்ளிகள் உருவாக வேண்டும் என்றார். முதல்வரய்யா ஒரு முறை எங்க பள்ளிக்கு வந்து பாருங்க என்று பச்சலூர் பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு அழைப்புக் கொடுத்ததையும் பதிவு செய்திருந்தோம்.

நக்கீரனில் இந்த செய்தி வெளியான நாளில் முதல்வர் அலுவலகம் பச்சலூர் பள்ளி பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளார். 8 ந் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க புதுக்கோட்டை வரும் முதல்வர் பச்சலூர் பள்ளிக்கும் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கி சிறுசிறு திருத்தப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அறந்தாங்கியிலிருந்து பச்சலூர் வழியாகக் காரைக்குடி செல்லும் சாலையில் புதுப்பட்டி வரை சாலையோர செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் பச்சலூர் வந்தால் தலைமை ஆசிரியர் ஜோதிமணி முதலில் உருவாக்கிய மாங்குடி பள்ளியையும் பார்க்க செல்வாரோ என்று மாங்குடி பள்ளியிலும் திருத்த பணிகளும் நடந்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நக்கீரன் வீடியோவில் வெளியான மாங்குடி, பச்சலூர் பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பார்த்தார். தற்போது தமிழக முதல்வர் பச்சலூர் வருகிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மாற்ற வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT