ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் மீண்டும் மீண்டும் நடக்கும் தவறுகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

11:35 PM Feb 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் சக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் கழிப்பறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கழிப்பறையை விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கின்றனர்.

இதேபோல மாணவிகள் சிலர் பள்ளியின் வளாகத்தை கூட்டிப் பெருக்குவதுடன், ஒட்டடை அடிக்கும் புகைப்படமும் பரவி வருகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளிக்கு படிப்பதற்காக அனுப்பிய தங்கள் குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதை கண்டு வேதனை அடைந்துள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் அரசு பள்ளி மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

மேலும் பொதுமக்கள், இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.

தகவலறிந்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனகராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT