ADVERTISEMENT

கையில்லாத நிலையிலும் சாதனை; கரம் உயர்த்திய கல்வி

10:45 AM May 20, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரு கைகள் இல்லாத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவரை முதல்வர் பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நேற்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாணவர் ஒருவர் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்தது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா தனது நான்கு வயதில் வீட்டில் விளையாடிய போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையைக் கண்டு கீர்த்தி வர்மாவின் தந்தை வீட்டில் இருந்து சென்று விட, ஆதரவற்ற நிலையில் கஸ்தூரி தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து கஸ்தூரி மகனை படிக்க வைத்து வருகிறார். தொடர் தடைகளால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் வேப்பனப்பள்ளி அருகே நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கீர்த்தி வர்மா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று வெளிவந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கீர்த்தி வர்மா 500க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து அவர் படித்த பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரு கைகளை இழந்தும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து காட்டிய மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் கீர்த்தி வர்மா அவர்களின் வெற்றிச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள். அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கீர்த்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT